Thursday, November 1, 2012

சாண்டி புயல்: அமெரிக்காவில் 50 பேர் பலி - அணுஉலைகள் மூடப்பட்டன

Sandy death toll rises, millions without power in U.S.
அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதியில் மையம் கொண்டுள்ள சாண்டி புயல், அந்தப் பகுதியில் அமைந்துள்ள நகரங்களை சின்னாபின்னமாக்கி உள்ளது. வடக்கு கரோலினாவில் இருந்து கனெக்டிகட் வரையில் தொலை தொடர்பு வசதிகள் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டு நகரங்கள் யாவும் இருளில் மூழ்கின. இதனால் 80 லட்சம் மக்கள் தவிக்கின்றனர்.

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். பல்வேறு இடங்களில் மக்கள், புகலிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த இயற்கைச் சீற்றத்தால் நியூயார்க், நியூ ஜெர்சி மாகாணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 
இதுவரை புயலால் அங்கு 50 பேர் உயிரிழந்தனர். நியூயார்க் நகரில் மட்டுமே புயல் சம்பந்தமான விபத்துக்களில் 18 பேர் பலியாகினர். 1888-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக நியூயார்க் பங்குச்சந்தை இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. நியூயார்க், நியூ ஜெர்சி மாகாணங்களில் ஏற்பட்டுள்ள பெருத்த சேதங்களின் காரணமாக இரு மாகாணங்களையும் இயற்கை பேரிடர் மாகாணங்கள் என ஜனாதிபதி ஒபாமா அறிவித்தார். 

இந்த இரு மாகாணங்களிலும்தான் இந்தியர்கள் அதிகமாக வாழ்கின்றனர். நியூஜெர்சியில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இந்தியர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கும் இடம் பெயர்ந்தனர். ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தாலும், ஒபாமா தனது தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு புயல் நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். 

இதுகுறித்து ஒபாமா கருத்து கூறுகையில், இந்தப் புயல் கடும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. சாண்டி புயல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். நியூஜெர்சிக்கு ஜனாதிபதி ஒபாமா நேரில் சென்று, சேதங்களை மதிப்பிடுவதுடன், நிலவரத்தை நேரில் ஆராய்வதாக வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் உள்ள 3 அணு உலைகளும் மூடப்பட்டுவிட்டன. 

ஜப்பானில் புகுஷிமோவில் நேர்ந்ததுபோல பாதிப்புகள் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. நியூ ஜெர்சியில் கடலோரப் பகுதியில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. நியூயார்க் நகரில் கடல் அலைகள் 13 அடி உயரத்துக்கு ஆர்ப்பரிக்கின்றன. 

இதுவரை இப்படி நிகழ்ந்தது இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. சாண்டி புயலால் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூயார்க், நியூஜெர்சி, பென்சில்வேனியா, கனெக்டிகட், மேரிலாந்து, வடக்கு கரோலினா, மேற்கு வெர்ஜினியா மாகாணங்களில் புயலால் பலர் உயிரிழந்துள்ளனர். 

நியூயார்க்கில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அந்நகர மேயர் புளூம்பெர்க் தெரிவித்தார். எங்கள் வாழ்நாளில் நாங்கள் பார்த்த மிக மோசமான புயல் இதுதான் எனவும் அவர் கூறினார். இத்தனைக்கு மத்தியிலும் தலைநகர் வாஷிங்டன், சாண்டி புயலில் தப்பித்துள்ளது. 

அங்கு போட்டோமேக் ஆற்றில் வெள்ளப்பெருக்கு எடுத்து எங்கும் வெள்ளம் சூழ்ந்தாலும், உயிர்ப்பலிகள் ஏற்படவில்லை. ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தாலும் நியூயார்க், நியூஜெர்சியுடன் ஒப்பிடும்போது, வாஷிங்டனில் பெரிதான பாதிப்புகள் இல்லை என தெரியவந்துள்ளது. 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza