Monday, October 1, 2012

இராமநாதபுரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீயில் கருகி பலி: போலீஸ் விசாரனை!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள என்மனம்கொண்டான் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தோப்புவலசை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கள்ளழகர். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் காளிமுத்து. இவர்களுக்கு காளீஸ்வரி (வயது13), பாலமுருகன் (8), சரண்யா (6), சக்தி (1) ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். 

கள்ளழகர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் காளிமுத்துவின் தந்தை கருப்பையா தனது மகளுடன் பாதுகாப்புக்காக வசித்து வந்தார். தோப்புவலசை கிராமத்தில் தனியாக ஒரு பெரிய குடிசை வீடு கட்டி இவர்கள் அதில் வசித்து வந்தனர். 


நேற்று இரவு 6 பேரும் வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு வீட்டில் படுத்து தூங்கி விட்டனர். நள்ளிரவு நேரத்தில் திடீரென இந்த வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. வீட்டுக்குள் தூங்கி கொண்டு இருந்தவர்கள் அலறியடித்து எழுந்தனர். அய்யோ... அம்மா... காப்பாற்றுங்கள் என்று கதவை திறந்து வெளியே வருவதற்குள் வீடு முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. 

இந்த வீட்டின் அருகில் எந்த வீடும் இல்லாததால் உதவிக்கு உடனடியாக யாரும் வரமுடியவில்லை. இதனால் 6 பேரும் தீயில் சிக்கி உடல் கருகி பலியானார்கள். 

இன்று அதிகாலை அந்த பகுதியில் நடமாடியவர்கள் காளிமுத்து வீடு தீ பிடித்து எரிந்து கிடப்பதை பார்த்து உச்சிப்புளி ஊராட்சி மன்ற தலைவி காளீஸ்வரி விஸ்வநாதன் மற்றும் உச்சிப்புளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

காளீஸ்வரி விஸ்வநாதனும், கிராம மக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரும் விரைந்து வந்து கருகிய நிலையில் கிடந்த உடல்களை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

நேற்று இரவு வீட்டில் உள்ள 6 பேரும் சாப்பிட்டு விட்டு பேசிகொண்டு இருந்துள்ளனர். அதன் பிறகு வழக்கம்போல் படுத்து விட்டனர். இந்த வீடு குடிசை வீடாக இருந்தாலும் மின் இணைப்புள்ள வீடாக உள்ளது. எனவே மண் எண்ணை விளக்கோ, அரிக்கேன் விளக்கோ வைக்கப்பட்டு அது கவிழ்ந்து தீ பிடித்து 6 பேரும் பலியாகி இருக்க வாய்ப்பு இல்லை என்று போலீசார் கருதுகிறார்கள். 

ஒருவேலை கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் சொத்துக்கு ஆசைப்பட்டு யாராவது சதி செய்து வீட்டிற்கு தீ வைத்தார்களா? என்பது மர்மமாக உள்ளது. உச்சிப்புளி போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza