Sunday, September 30, 2012

இன்று உலக இதய நாள்!

World Heart Day
உணவும், ஓய்வும் இன்றி வேலையே கதி என்று ஓடி உழைக்கும் இளைஞர்கள் கவனிக்க. ஒரு தினம் யாரும் எதிர்பாராத வகையில் நீங்களும் ‘sudden attack’ ஆல் பாதிக்கப்படலாம்.
இந்தியாவில் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 20 வயது ஆக குறைந்துள்ளது என்று புதிய ஆய்வு அறிக்கை கூறுகிறது. இளைஞர்களுக்கும் ஏன் குழந்தைகளுக்கு கூட இதயநோய் பாதிக்க துவங்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இதுக்குறித்து நாம் சிந்தித்திருக்க மாட்டோம். டெல்லி,மும்பை, பெங்களூர் உள்ளிட்ட மாநகரங்களில் தாங்கள் நடத்திய சர்வேயில் இதய நோய் வருவதற்காக வாய்ப்பு 20 வயதாக குறைந்துள்ளது என்று டெல்லி பி.எல்.கே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநரும் சீனியர் கன்ஸல்டண்டுமான டாக்டர் நீரஜா பாலா கூறுகிறார்.

முன்பெல்லாம் பெண்களிடம் இதய நோய் மூலம் ஏற்படும் மரணத்தின் சதவீதம் குறைவாக இருந்தது. தற்போது அதுவும் மாறிவிட்டதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.  ‘பெண்கள், குழந்தைகளிடம் இதய நோய் உருவாவதை தடுப்போம்’ என்பதுதான் 2012 உலக இதய தினத்தின் முக்கிய முழக்கமாகும்.
இதய நோய்கள் மூலம்(cardiovascular diseases (CVD))மரணிப்பவர்களில் 3இல் ஒருவர் பெண் ஆவார். உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இருதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் அதிகம் என்று உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் 1 கோடியே73 லட்சம் பேர் இறக்கின்றனர். மலேரியா,எச்.ஐ.வி., மற்றும் டி.பி., ஆகியவற்றால் 38 லட்சம் பேர் மட்டுமே இறக்கின்றனர் என்கிறது புள்ளிவிபரம். உலகில் ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள், பிறக்கும் போதே இருதய குறைபாட்டுடன் பிறக்கின்றன. உலகில் 10 மாணவர்களில் ஒருவர், அதிக எடை உள்ளவர்களாக உள்ளனர்.
இதய நோய்க்கான காரணங்கள்
1.உடற்பயிற்சி இன்மை
2.கொழுப்பு அதிகமான உணவுப்பொருட்களை உண்ணும் பழக்கம்.
3.மதுபானம், புகைப்பிடித்தல்
4.பணிகள் காரணமாக உருவாகும் மன அழுத்தங்கள்
எவ்வாறு தடுக்கலாம்?
நோ டென்சன் ரிலாக்ஸ்
உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். பெரும்பாலான நோய்களின் நிவாரணியே மௌனம், தியானம், நிதானம்தான்! எப்போதும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.
இன்றைய பணிச் சூழலில் மனஅழுத்தம் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகிறது. எனவே எந்த செயலையும் அழுத்தமின்றி செய்ய பழகிக் கொண்டாலே இருதயத்தில் அழுத்தமோ, டென்சனோ ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
உணவுப் பழக்கம்
உணவுப் பழக்கங்களை மாற்றி, உணவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுவதுடன், மாரடைப்பு வந்தவர்களுக்கு மீண்டும் ஏற்படாமல் தடுத்து நிறுத்தவும் முடியும்.
இதயத்தை காக்க மற்ற உணவு வகைகளை விட, புரோட்டீன் வகை உணவுகள் இதயத்துக்கு இதம் தருகின்றன. புரோட்டீன் இதயத்துக்கு நண்பன் என்றே சொல்லலாம்.
முட்டையில் பி விட்டமின் இருக்கிறது.
மீன் உணவுகளில் ஒமேகா 3 , பேட்டி ஆசிட் இருக்கிறது.
தோலில்லா கோழியிறைச்சி இவைகள் உணவில் சேர்த்து வந்தால் இதயத்துக்கு தேவையான புரோட்டினைத் தந்து காக்கும்.
பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணை இவைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. பட்டானி, பீர்க்கன்காய், வால்நட் முதலியன இதயத்துக்கு வேண்டிய கொழுப்பை தந்து இதயத்தை காக்கும். ஃபாஸ்ட் புட்டிற்கு விடை கொடுங்கள்.
சீரான ரத்த ஓட்டம்
இதயநோய்கள், அட்டாக் இவை வருவதற்கு முதல் காரணமாக இருப்பவை ரத்த ஓட்டத்தின் அளவைப் பொறுத்தே அமைகிறது. இந்த ரத்த ஓட்டத்தை சீர்படுத்த தேவையான ஊட்டச்சத்து, வைட்டமின் இ, சி, போன்றவை இதயத்திற்கு வலுசேர்க்கின்றன.
ஒவ்வொருவரும் ஒரு நாளில் காய்கறி அல்லது பழங்களின் ஜூஸ் குடிப்பதை வாடிக்கையாக கொள்ள வேண்டும். வெள்ளைப் பூண்டு கொலஸ்ட்ராலை கட்டுபடுத்தும் சக்தி கொண்டிருப்பதால் பூண்டை உணவில் சேர்த்து வந்தால் இதய நோய்களை தவிர்க்கலாம்
புகை வேண்டாமே
இருதயத்தின் முக்கிய எதிரி புகைதான். எனவே புகையை விட்டொழியுங்கள். புகையிலை சேர்ந்த எந்தப் பொருளையும் பயன்படுத்தாதீர்கள். அது வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கமோ, புகைபிடிக்கும் பழக்கமோ எந்த போதை பழக்கமாக இருந்தாலும் இப்போதே விட்டுவிடுங்கள்.
உடற்பயிற்சி
தினமும் அரை மணி நேரமாவது காலார நடை போடுங்கள். சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்பு ஏற்படுதுவதை பெருமளவு குறைத்து விடலாம். பொதுவாக இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை நடைப்பயிற்சி (walking), மெல்லோட்டம்(jogging), சைக்கிள் பயிற்சி(cycling),  நீச்சல் பயிற்சி(swimming) என நான்கு வகைகளாக பிரிக்கலாம். இவற்றில் உங்கள் வயது, உடல் அமைப்பு, ஓய்வு நேரம்,உடல் ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
சிரிங்க சிரிக்க வைங்க
வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள். இப்படி முறையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உயரத்திற்கேற்ற உடல் எடை என்று ஆரோக்கியத்தைக் கடைப்பிடித்தால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. எப்போதும் மகிழ்ச்சியுடனும், சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியுடனும் வைத்துகொள்ள பழகுங்கள். புத்துணர்வு பெற சிறிது ஓய்வு எடுங்கள். கோபத்தைத் தூக்கியெறியுங்கள் இருதயம் கடைசி வரை ஆரோக்கியமாய் இயங்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

தகவல்: thoothu

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza