Tuesday, September 25, 2012

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு முதல் ரோமிங்க் கட்டணம் ரத்து! மத்திய அரசு திட்டம்!


அடுத்த ஆண்டில் இருந்து, வெளி மாநிலங்களில் போனை பயன்படுத்தினாலும், ரோமிங் கட்டணம் கிடையாது. இந்தியா முழுவதிலும் ரோமிங் கட்டணம் இல்லாமல் போனில் பேச முடியும். மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது, இந்தியாவில் பல மாநிலங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் மாநில எல்லையை கடக்கும் போது, செல்போன் பயன்படுத்தினால் ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் தொழில், படிப்பு என்ற பல்வேறு காரணங்களுக்காக, பல மாநிலங்களுக்கு செல்பவர்கள், அதிக பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது.


செல்போன்களுக்கு ரோமிங் கட்டணத்தை ரத்து செய்வது குறித்த திட்டத்திற்கு, மத்திய அரசு கடந்த மே மாதம் அனுமதி அளித்தது. ஆனால் அந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை
.
இந்திய இன்டர்நெட் ஆளுகை மாநாட்டில் கலந்து கொண்ட பின் மத்திய அமைச்சர் கபில் சிபில், செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் நாடு முழுவதும் ரோமிங் கட்டணம் ரத்து செய்யும் திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கபில்சிபில், “அடுத்த ஆண்டில் இருந்து நாடு முழுவதும் ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படும்” என்பதை தெரிவித்தார்.
தற்போது டீசலில் இருந்து சர்க்கரை வரை ஒரே விலையுயர்வு அறிவிப்புகளாக வந்துகொண்டிருக்கும் நேரத்தில், இப்படியொரு அறிவிப்பு மக்களை ஓரளவுக்கு சாந்தப்படுத்தலாம். அதேநேரத்தில், அடுத்த ஆண்டு எப்போது இது அமலுக்கு வரும் என அமைச்சர் தெரிவிக்கவில்லை.

டில்லி தகவல்களின்படி, அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மக்களை குஷிப்படுத்த அரசு வைத்துள்ள திட்டங்கள் சிலவற்றில் இதுவும் ஒன்று என்கிறார்கள். அது உண்மையாக இருந்தால், தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பே இந்தத் திட்டம் அமலுக்கு வரும்!

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza