லண்டன்:ஈராக்கின் மீது போரை திணித்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் w புஷ் மற்றும் பிரிட்டீஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் ஆகியோரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி விசாரணை நடத்தவேண்டும் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பிரபல சமூக ஆர்வலருமான ஆர்ச் பிஷப் டெஸ்மண்ட் டுட்டூ கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டனில் இருந்து வெளியாகும் அப்ஸர்வர் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் புஷ் மற்றும் பிளேயர் மீது கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கட்டுரையில் கூறியிருப்பது: “ஈராக்கில் மனித பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக ஜார்ஜ் புஷ்சும் , டோனி பிளேரும் பொய் கூறி ஈராக் மீது போர் தொடுத்துவிட்டனர். உலகை தவறாக புரிய வைத்தனர். இதற்கு முன்னர் வரலாற்றில் நிகழ்ந்த மற்ற போர்களை விட ஈராக் போர்தான் உலகை மிகவும் மோசமாக ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளியது.
சிரியாவில் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டு போர், மற்றும் ஈரானை மையமாகக் கொண்டு மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதட்டம் ஆகியவையும் கூட ஈராக் மீது அமெரிக்கா, பிரிட்டன் போர் தொடுத்தது தான் காரணம். இந்த குற்றங்களை செய்த ஜார்ஜ் புஷ், டோனிபிளேர் இருவரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும். இரு தலைவர்களும் தாங்கள் அடாவடித் தனங்களை செய்வதற்காக பொய்யான காரணங்களை தாங்களே உருவாக்கி சொன்னார்கள். மக்கள் பிளவுபடவும் வழிசெய்து விட்டார்கள். சதாம் ஹுஸைனை தண்டிப்பதற்கான அதிகாரம் இவர்களிடம் இல்லை. ஈராக்கில் ஆயிரக்கணக்கான மக்களை கொலைச் செய்த குற்றத்திற்கான பொறுப்பை இந்த இரண்டு தலைவர்கள் மீதே சாட்டவேண்டும்” என்று டுட்டூ கூறியுள்ளார்.
கடந்த வாரம் ஜொகனாஸ் பர்கில் நடந்த ஒரு உச்சி மாநாட்டில் ப்ளேயருடன் மேடையில் கலந்துகொள்ள டுட்டூ மறுத்துவிட்டார்.
1984-ஆம் ஆண்டு டுட்டூவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடிய முன்னணி போராளிதான் டெஸ்மண்ட் டுட்டூ. கேப்டவுனில் முன்னாள் ஆர்ச் பிஷப் ஆகவும் பதவி வகித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment