புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது பெண்கள், குழந்தைகள் உள்பட97 முஸ்லிம்களை கொடூரமாக கொலைச் செய்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தவர்களுக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடுச் செய்யவேண்டும் என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டிஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
“குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை வழங்கியுள்ள சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. நீதி கிடைப்பதற்காக போராடிய தீஸ்தா ஸெடல்வாட் உள்ளிட்டோரை பாராட்டுகிறோம். இத்தீர்ப்பு நாட்டின் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கச் செய்துள்ளது. வழக்கமாக கலவர வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவது இல்லை. முதன் முறையாக குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு சிறப்பாக செயல்பட்டதால் இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அரசியல், பொருளாதார பலமிக்க குற்றவாளிகளின் மிரட்டல்களால் அஞ்சி மனம் தளராமல் உறுதியாக இருந்த சாட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பும், மத்திய படையினரை அனுப்பியதும் சாட்சிகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவியது. கலவரங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு முந்தைய காலங்களில் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருக்குமானால் இத்தகைய கலவரங்கள் உருவாகியிருக்காது. முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி மற்றும் 30 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டிருப்பதன் மூலம் காரியங்கள் சரியான திசை நோக்கி செல்வதை காட்டுகிறது.
குஜராத் இனப்படுகொலையில் குற்றவாளிகளான இதர பிரமுகர்களுக்கும் இத்தீர்ப்பு எச்சரிக்கையாகும். கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பழிவாங்க நடந்த கலவரம் என்று சங்க்பரிவார்கள் அளித்த விளக்கத்தை முற்றிலும் நிராகரித்த நீதிமன்றம் நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை முன்னரே திட்டமிட்டு தயார் செய்த சதித் திட்டம் என்று கூறியது பாராட்டத்தக்கது.
இத்தீர்ப்பு வகுப்புவாத வெறியை கட்டுப்படுத்தவும், சங்க்பரிவார சக்திகளை தளர்த்தவும் உதவும். உயர் கல்வி மதவெறிக்கு தடையில்லை என்பதை டாக்டரான மாயா கோட்னானியின் செயல்கள் சுட்டிக்காட்டுகின்றன.” இவ்வாறு இ.அபூபக்கர்தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment