சென்னை: முஸ்லிம்கள் தங்கள் உயிரையும் விட புனிதமாக மதிக்கும் முஹம்மது நபியவர்களை இழிவுபடுத்தும் விதமாக அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா மாகானத்தில் வசித்து வரும் யூத இனத்தைச்சேர்ந்த ஷாம் பேசிலி என்ற திரைப்பட இயக்குனர் மற்றும் அமெரிக்காவைச்சேர்ந்த டெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ போதகர் ஆகிய இருவரும் ஒன்றினைந்து திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளனர். அதில் உண்மைக்கு புறம்பாகவும், பொய்யான விஷயங்களை பரப்பியும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தினரையும் புண்படுத்தும் விதமாக அதனை தயாரித்துள்ளனர்.
இதனால் உலகம் முழுவதும் முஸ்லிம் சமூக மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு பல்வேறு நாடுகளில் அமெரிக்காவை கண்டித்து பலவகையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. முஸ்லிம் சமூகத்தின் உயிர் மூச்சான முஹம்மது நபியவர்களை இழிவுபடுத்தும் செயல்கள் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்கள் செய்துவருகிறார்கள். இவ்வாறு செய்பவர்களை அந்நாட்டு அரசாங்கங்கள் தண்டிப்பதாக தெரியவில்லை. இத்தகைய செயலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சென்னை அண்ணாசாலையிலுள்ள அமெரிக்க தூதரகத்தை இன்று (13.09.2012) மாலை 4 மணியளவில் முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ்மாநில துணைத்தலைவர் முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் மாநில செயலாளர் ஷேக் முஹம்மது அன்சாரி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.


0 கருத்துரைகள்:
Post a Comment