ஒவ்வொரு மனிதனையும் வெவ்வேறு விதமான நோய்கள் திடீர் திடீரென தாக்குகிறது. அதற்கு சரியான சிகிச்சை அளிக்கா விட்டால் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. சமீப காலமாக திடீர் திடீரென வைரஸ் நோய்கள் நாடெங்கும் பரவி நம்மை பதற வைத்து விடுகின்றன. குறிப்பாக சிக்குன் குனியா, பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல் போன்ற அதிபயங்கர வைரஸ் காய்ச்சல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த வைரஸ் நோய் தாக்கிய பலர் உயிர் இழந்ததால் உலகம் முழுவதும் பெரும் பீதி ஏற்பட்டது. வைரஸ் காய்ச்சல் பரவும் தன்மை கொண்டதால் தங்களை காய்ச்சல் தாக்கி விடுமோ என்று எண்ணி முக கவசம் போட்டுக் கொண்டவர்கள் ஏராளம். இந்த கவசம் அணிந்தால் வைரஸ் தாக்காதா? நிச்சயம் தாக்கும். முக கவச துணியில் ஊடுருவும் அளவுக்கு மிகவும் சிறிய அளவுடையது தான் வைரஸ்கள்.
எனவே எப்பேர்பட்ட நோய்களையும் கண்டுமிரளாமல் இருக்க நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலமானதாக மாற்றினால் போதும். அது எப்படிப்பட்ட வைரசையும், புற்று நோயையும் அடியோடு விரட்டி விடும் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் பிரபல நோய் எதிர்ப்பு சக்தி நிபுணர் டாக்டர் சார்லஸ். அவர் மேலும் கூறியதாவது:-
ஒவ்வொரு நோய்க்கும் தடுப்பூசி, தடுப்பு மருந்துகள் எடுத்துக் கொள்வதை விட நம்மிடம் உள்ள மிகச் சிறந்த ஆயுதமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது புத்திசாலித்தனமான ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தி சிறிதளவு கூட இல்லாதவர்கள் தான் டஜன் கணக்கான நோய்களின் பிடியில் சிக்கி சீரழிந்து வருகிறார்கள். இந்த ரகத்தினர் தான் மருத்துவமனைக்கும், மருத்துவ கடைக்கும், அடிக்கடி சென்று மருந்து-மாத்திரைகளுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
நோய் எதிர்ப்பாற்றல் குறைவால் அவதிப்படுவோருக்கு நிச்சயம் அடிக்கடி தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம், இருமல், உடல்வலி, களைப்பு போன்றவை ஏற்படும். நோய் எதிர்ப்பாற்றல் அதிகம் இருப்போர் எப்போதுமே நல்ல உடல் நலத்துடன் உலா வருவதை கண்கூடாக பார்க்க முடியும். இதுவரை நாம் நோய் எதிர்ப்பு சக்தி என்பதை அதிகம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் அதன் செயல்பாடுகள் என்ன, எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படிப நோய் வராமல் தடுப்பது எப்படி? என்பது பற்றி அறியாமல் இருப்போம். அது பற்றி விரிவாக பார்ப்போம். நம் உடலை நோய் கிருமிகள் தாக்காமல் இருக்க நம் உடலில் இருக்கும் இயற்கையின் அதிசயம் தான் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம்.
இந்த மண்டலத்திலுள்ள நோய் எதிர்ப்பு செல்கள் சரிவிகித அளவில் செயல்பட்டால் நோயின்றி வாழ முடியும். உடலில் நோய் எதிர்பாற்றல் குறையும் போது பலவிதமான நோய்கள் நம்மை தாக்கி பாடாய்படுத்தி விடும்.
செயல்பாடுகள்......
அனைத்து வகை நோய் கிருமிகளிடமிருந்தும் நம் உடலை பாதுகாத்தல். நச்சுகள், தேவையற்ற கழிவுகள் போன்றவற்றை நீக்கி உடலை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களை அதிகரித்து நம் உடலுக்கு சுறு சுறுப்பையும் நீண்ட ஆயுளையும் தருகிறது. உடல் உறுப்புகளை சரிவர செயல்பட வைத்து தேவையான அளவுக்கு என்சைம் மற்றும் ஹர்மோன்களை சுரக்க வைக்கிறது.
நோயை விரட்டும் தாய்ப்பால்........
தாய் தனது குழந்தைக்கு அளிக்கும் முதல் நாள் பாலில் (சீம்பால்) பல்வகை சத்துக்கள் உள்ளன. அது அதிக நோய் எதிர்ப்பாற்றல் மிக்கதாகவும் இருப்பதை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எதனால் குறையும்?
இன்றைய அவசர உலகில் நமது விரைவு உணவு (பாஸ்ட்புட்) பழக்க வழக்கங்களாலும், காலம் தவறிய உணவு முறைகளாலும், மரபணு முறையில் தயாரிக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளாலும் நோய் எதிர்ப்பாற்றல் வெகுவாக குறைந்து விடுகிறது. இதனால் பலவிதமான நோய் தாக்கப்படும் அளவிற்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம். இவ்வாறு இயற்கையாக நாம் பெறப்பட்ட நோய் எதிர்ப்பாற்றலை இழக்கிறோம்.
எதிர்ப்பாற்றல் யாருக்கு குறைவு.......
1. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களிடம், 2. சத்து குறைபாடு உள்ளவர்களிடம், 3. புற்று நோய், சர்க்கரை நோய், எய்ட்ஸ், ரத்த சோகை, தைராய்டு குறைபாடு போன்ற நோய்களால் தாக்கப்பட்டவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுகிறது.
புற்று நோய்..........
பொதுவாக செல்கள் வளர்ந்து சீரான முறையில் பிரிந்து புதிய செல்கள் உருவாகும். சில நேரங்களில் பழைய செல்கள் இறக்காமல் சில தேவையற்ற அதிக செல்களை உருவாக்கி விடுகின்றன. இந்த செல்கள் கால போக்கில் சதை திரட்சியாக நாளடைவில் மாற்றி புற்று நோய் வளர்ச்சியாகவோ அல்லது கட்டியாகவோ உருவெடுக்கிறது.
இந்தியாவில் வருடத்திற்கு 7 லட்சம் பேர் புதிதாக புற்று நோயால் தாக்கப்பட்டு வருகின்றனர். இதில் `3 லட்சம் பேர் அதே ஆண்டுக்குள் மரணத்தை சந்திக்க நேர்கிறது. புற்று நோய் தாக்கப்பட்ட உடனேயே அவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குன்றுகிறது. இதனால் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கடும் அவதிக்குள்ளாகிறார்கள்.
புற்று நோயா?
உலகின் தலைசிறந்த மருத்துவ ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் பாலூட்டி விலங்குகளிடம் காணப்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் அதிக வீரியம் கொண்டதாக இருந்தது. இந்த நோய் எதிர்ப்பாற்றலை அறிவு பரிமாற்றம் செய்யக் கூடிய உயிரணு மற்றும் மூலக்கூறுகளை நவீன தொழில் நுட்பத்தின் உதவியோடு பிரித்தெடுத்து அதனோடு உலகின் தலை சிறந்த எதிர் குணம் கொண்ட எல்டி பெரி, புளூபெரி, அகாய் போன்ற பழங்களின் சாறுகளையும் சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட மூலக் கூறுகள் மற்றும் எதிர்ப்பாற்றல் நிறைந்த மருந்துகளை புற்று நோயாளிகள் சாப்பிட்டால் உடலில் உள்ள தைமஸ் சுரப்பி சரிவர இயங்கி `டி' செல்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி கேன்சர் செல்களை அழித்து நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகின்றது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சாப்பிட வேண்டிய உணவு......
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் வைட்டமின் ஏ,சி,இ, நிறைந்த பழங்கள், காய்கறிகள் அன்னாசி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, கேரட் சாப்பிடலாம். இதே போல் சோயாபால், ஓட்ஸ், சோத்து கத்தாழையால் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், பாகற்காய் (துத்த நாகம்) அதிக கொண்ட உணவுகள் சாப்பிடுவதும் நல்லது.
உடலில் வலுவான நோய் எதிர்ப்பாற்றல் இருந்தால் புற்று நோய், நீரிழிவு நோய், பார்கின் சோனிசம், (நரம்பு தளர்ச்சி நோய்) சிறுநீரக செயலிழப்பு, போன்ற அனைத்து வகை நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து முதுமையை தாமதப்படுத்தி நீண்ட நாட்கள் பரிபூரண வாழ்க்கை வாழ முடியும் என்கிறார் டாக்டர் சார்லஸ்.
3 வகை.......
நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான எதிர்ப்பு சக்தி, தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி, உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்று 3 வகையாக பிரிக்கலாம். இந்த எதிர்ப்பு சக்தி, பிறக்கும் போதே ஒருவரது உடலில் அமைவது மனித உடலுக்கு தோல் எப்படி ஒரு மிகப் பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோ, அதைப் போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக்கவசம் போல் செல்படுகின்றன.
இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக் கூடியவை. அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக்கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள் நியூட்ரோ பில்ஸ், போசோபில்ஸ், ஈசினோபில்ஸ், தூங்காத படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும்.
இரண்டாவது வகையான தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடன் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, தாக்கும் நோய்களுக்கு காரணமான ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்கு தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது `லிம்போ டைடஸ்' என்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்.
மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும் போது, இன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல். உதாரணமாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்புசக்தி தற்காலிகமாக கிடைக்கிறது. மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டனஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும்.
நோய் எப்போது ஏற்படுகிறது?
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது நோய்க்கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டசத்துக்குறைவினாலும் நோய் ஏற்படுகின்றன. நம் உடலில் நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் சில. பலகீனமான உடலமைப்பு, மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள், அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது, மது, போதைப் பொருள் பழக்கம், புகைப்பழக்கம், தூக்கமின்மை, சர்க்கரை நோய் இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கிறது.
உணவு.......
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பால், தயில், நெய், சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, மீன் இவற்றை வாரத்தில் மூன்று முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும். கடலை, சூரியகாந்தி விதைகள் போன்றவை துத்த நாகம் கால்சியம் போன்ற எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான சத்துக்களை அதிகரிக்க உதவும்.
தவிர்க்க வேண்டியவை.......
வேதிப் பொருள்கள், பூச்சி மருந்துகள் போன்றவை படிந்த பொருட்கள், மற்றும் வண்ணம் பூசப்பட்ட பொருட்கள், பதப்படுத்தப்பட்ட டின் பொருட்கள் போன்வற்றை உண்பதை தவிர்க்க வேண்டும். எண்ணையில் வறுத்த உணவுப் பண்டங்களை உண்ணக் கூடாது. அவை உடலில் நச்சுத் தன்மையை உண்டாக்குகிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
சர்க்கரையின் அளவு அதிகமானால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை 15 மணி நேரத்திற்கு குறைத்துவிடுகிறது. காபி, டீ இவற்றை அளவுக்கு மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற உபாதைகள் ஏற்படத் தொடங்கினால் மருத்துவரை அணுகி உடலை பதிசோதித்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவ பரிசோதனை மூலம் உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவர் மூலமாக அறிந்து கொள்ள முடியும். நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு உண்டு. நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு வாழ்வதே சிறந்தது என்கிறார் டாக்டர் சார்லஸ்.
0 கருத்துரைகள்:
Post a Comment