புதுடெல்லி:சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி மூதலீடு இந்தியாவின் சமூக வாழ்க்கையில் கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஒரு வால்மார்ட் சூப்பர் மார்க்கெட் மட்டுமே 1300 சிறிய சில்லரை வியாபார கடைகளை பூட்டவைத்து விடும் என்று பிரபல பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் ஒரு சூப்பர் மார்க்கெட் காரணமாக 3900 தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.
வேலையில்லா திண்டாட்டத்தால் திக்குமுக்காடும் சமகால இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் நேரடி முதலீடு பெரும் பின் விளைவுகளை உருவாக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 2009-10 ஆம் ஆண்டு நேசனல் சாம்பிள் சர்வே ரிப்போர்ட்டின் படி இந்தியாவில் நான்கு கோடி பேர் சிறுகடைகள் வியாபாரத்தின் மூலம் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். இதில் அதிகம் பேர் தெருவோரங்களில் வியாபாரம் செய்வோர் ஆவர்.
ஜி.டி.பி(உள்நாட்டு உற்பத்தி திறன்) அதிகரித்துள்ளதாக பெருமை பேசும் ஆவேச வாய்ச்சவடால்களுக்கு மத்தியிலும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதாக நேசனல் சாம்பிள் சர்வே சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் 15.6 சதவீதம் பேர் மட்டுமே குறிப்பிட்ட மாதச் சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதர நபர்களோ சுயத்தொழில் மூலமாகவோ, முறைசாரா தொழில்கள்(கட்டமைக்கப்படாத தொழில்கள்) மூலமாகவோ வாழ்க்கையை கழிக்கின்றனர். இத்தகையதொரு சூழலில் வெளிநாட்டு குத்தகை நிறுவனங்களின் வருகை பெருமளவிலான வேலை மற்றும் தொழில் இழப்புக்கு காரணமாகும்.
அமெரிக்க புள்ளி விபரங்களின்படி 1,08,000 சதுர அடியில் நிறுவப்படும் ஒரு வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை சராசரி வெறும் 225 ஆகும்.
0 கருத்துரைகள்:
Post a Comment