Sunday, August 19, 2012

உள்ளம் உவகை கொள்ளும் பெருநாள்!

உள்ளம் உவகை கொள்ளும் பெருநாள்!
உள்ளத்தையும், உணர்வுகளையும் அல்லாஹ்வுக்கு கடன் கொடுத்த இரவு, பகல்களுக்கு ஆனந்தமான விடை. விசுவாசிகளுக்கு உள்ளம் நிறைய உவகையை அள்ளித் தருவதுதான் பெருநாள் தினம்.
இதய நரம்புகளில் மகிழ்ச்சி தாண்டவமாடும் புண்ணிய தினம். நோன்பில் சம்பாதித்ததை பெருநாளுடன் முடித்துக்கொண்டவர்களுக்கு ஈத்-தோல்வியின் நாளாக முடிவடையும். உள்ளம் நிறைய மகிழ்ச்சி தழும்பும் பொழுதும் வரம்புகள் மீறாத மனோநிலைதான் நமது சம்பாத்தியம்.
பெருமையுள்ள நாள் தான் பெருநாள். அல்லாஹ்வின் மகத்துவத்தால் இப்பூவுலகம் முழுவதும் பிரகாசிக்கும் தினம். உச்சபட்ச குரலில் எழும்பும் தக்பீர்கள் அல்லாஹ்விடம் நமது சமர்ப்பணத்திற்கு மீண்டும் ஒரு அடையாளமாகும்.

“அல்லாஹ்வே பெரியவன்” என்று நாம் பிரகடனப்படுத்தும் வேளையில் இதர அனைத்துமே சிறியனவாகும். உணவும், பானமும், உடல் இச்சைகளும் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நமக்கு பெரிதல்ல என்பதை ரமலான் மாதம் முழுவதும் பகல் நேரங்களில் நாம் நிரூபித்துக் காட்டினோம். அல்லாஹ்வை நின்று வணங்குவதை விட எனக்கு தூக்கம் பெரிதல்ல என்பதை இரவு வேளைகளிலும் நிரூபித்தோம். அதுபோலவே சொத்துக்களோ, பிள்ளைகளோ ஏன் இந்த உலகின் அனைத்துமே எனக்கு அல்லாஹ்வின் முன்னிலையில் பெரிதல்ல என்பதை உறுதிப்படுத்தும் வாசகம் தான் “அல்லாஹ் அக்பர்”. அகிலங்களை படைத்து பாதுகாக்கும் அல்லாஹ் மட்டுமே மிகப்பெரியவன். நான் அவன் முன்னிலையில் அர்ப்பமானவன் என்ற நிலையில் சிரம் தாழ்த்தி நமது பணிவை வெளிப்படுத்துபவர்கள் நாம். நிரம்பிய கண்களுடனும், விதும்பும் உள்ளத்துடனும் அல்லாஹ்வை நாம் அந்த தினத்தில் துதிக்க கடமைப்பட்டுள்ளோம்.
“உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).”(அல்குர்ஆன் 2:185).
இப்பூவுலகில் நம்மை சிறந்த படைப்பான மனிதனாக படைத்து, அம்மனிதர்களில் அறியாமையின் காரிருளில் சிக்காமல் அவனை முற்றிலும் வழிபடும் முஸ்லிமாக ஆக்கி நேர் வழி காட்டியதற்காக அல்லாஹ்வை நாம் எவ்வளவுதான் புகழ்ந்தாலும் ஈடாகாது.
இறையச்சம்(தக்வா) தான் ரமலானின் அழகும், அருளும் ஆகும். உள்ளத்தின் உறுதியை மீட்டெடுப்பதே தக்வா. உலக ஆசாபாசங்களை நோக்கி அலைபாயாத மனக்கட்டுப்பாடுதான் நாம் பெறும் உயர்ந்த செல்வமாகும். அதைவிட வேறெதுவும் பெரிதல்ல. உள்ளத்தின் பலமும், தீமைகளுக்கு எதிராக போராடும் மனோநிலையும் இன்று தனிமனிதர்களிடமும், சமூகத்திடமும் இழக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய மனோதிடத்தை வளர்த்தியெடுப்பதே ரமலான்.
ரமலானில் நிகழ்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் குறித்து நமக்கு தெரியும். அந்த வரலாற்றுக்கு உயிரூட்டியவர்களாக நாம் மாறவேண்டும். உடல் தேவைகளையும், மன இச்சைகளையும் நாம் ரமலான் மாதம் முழுவதும் அல்லாஹ்வுக்காக கட்டுப்படுத்தினோம். அதே கட்டுப்பாட்டை இனி வரும் மாதங்களிலும் நன்மைகளை புரிவதிலும், தீமைகளை விட்டு விலகுவதிலும் கடைப்பிடிக்கவேண்டும். தீமைகளை விட்டொழிப்பதைவிட எளிதானது நன்மை செய்வது. வணக்க வழிபாடுகள், தான தர்மங்கள், நோயாளிகளை சந்திப்பது, திருக்குர்ஆனை ஓதுவது போன்றவை எளிதானவை. ஆனால், நாவை கட்டுப்படுத்துதல், கோபத்தை கட்டுப்படுத்துவது, பார்வையை கட்டுப்படுத்துவது போன்ற தீமைகளை விட்டு விலகுவது அவ்வளவு எளிதானதல்ல. அதற்கு கூடுதல் கவனமும், எச்சரிக்கை உணர்வும் தேவைப்படுகிறது. அதனை தருவதே இறையச்சம்.
“நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் – அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.”(அல்குர்ஆன் 7:201).
“தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.”(அல்குர்ஆன் 3:135)
மேற்கண்ட வசனங்கள் இறையச்சமுடையோரின் பண்புகளை எடுத்தியம்புகிறது.
பவுதீக,ஆன்மீக ஆனந்தங்களின் கொண்டாட்டமே பெருநாள். இவை இரண்டும் ஒரு முஸ்லிமின் ஆளுமையில் அடங்கியுள்ளது. மண்ணில் இருந்து கொண்டு விண்ணைத்தொடும் முயற்சிதான் நோன்பு. அத்தகைய பயிற்சியின் தொடர்ச்சிதான் பெருநாளும்.
சுயநலத்தை கழைந்து பொதுநலனுக்கு மனதை உயர்த்துவதற்கான பயிற்சியை மேற்கொண்டோருக்கான திருநாள் தான் பெருநாள்.
சுற்றுமுள்ள சகோதரர்கள் எல்லோரும் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்த பிறகே நாம் பெருநாளை கொண்டாட வேண்டும். ஒவ்வொரு நேரமும் நாம் உணவை உண்ணும் வேளையில் கடைப்பிடிக்க வேண்டிய உயர்ந்த பண்பை ஃபித்ர் ஸக்காத் நமக்கு போதிக்கிறது. நமது உணவை குறித்து மட்டுமல்ல நமது அண்டை அயலாரை குறித்தும் சிந்திக்க தூண்டும் மார்க்கம் தான் இஸ்லாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தனது அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவர் முஃமினாக (இறை விசுவாசியாக) மாட்டார்.” (முஸ்னத் அபூ யஃலா)
சுயநலனை கைவிட்டு சமூகக் கண்ணோட்டத்தோடு வாழ கட்டளையிடுகிறது திருக்குர்ஆன். சமூகத்தோடு கருணை காட்டாதவனை மறுமையை பொய்ப்பித்தவனாக திருக்குர்ஆன் சித்தரிக்கிறது.
“(நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?  பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.” (அல்குர்ஆன் 107:1-3)
கருணை மிக்க இறைவன், கருணையுடன் அனுப்பப்பட்ட இறைத்தூதர், காருண்யத்தின் வேதம் திருக்குர்ஆன் – இதுதான் இஸ்லாம். முஸ்லிமின் வாழ்க்கை அணுகுமுறைகளிலும், குணநலன்களிலும் இந்த பண்பு நலன் தான் மிளிரவேண்டும்.
அல்லாஹ்வுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான உறவு போலவே முக்கியத்துவம் வாய்ந்ததுதான் மனிதர்களியேயான உறவுமாகும். மனிதர்களுடன் இணைந்து இணக்கமாக வாழவே இஸ்லாம் கட்டளையிடுகிறது. அல்லாஹ்வுடனான தொடர்பை துண்டிப்பது போலவே மனிதர்களுடனான தொடர்பை துண்டிப்பதும் பாவமான காரியமாகும்.
‘அல்ஹாக்கா’ அத்தியாயத்தில் நரகத்தில் மனிதன் நுழைய காரணமாகும் இரண்டு பாவங்களை குறித்து அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
“நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்.  அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை.
எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை.  சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை. குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்.” (அல்குர்ஆன் 69:33-37).
அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாததே நரகத்திற்கு நுழைய போதிய காரணமாகும். நம்பிக்கையில்லாத மனிதன் வேறு பல தீமைகளையும் புரிந்திருக்கலாம். ஆனால், ஏழைகளுக்கு உணவளிக்க தூண்டவில்லை என்பதை திருக்குர்ஆன் மிக முக்கியமாக சுட்டிக்காட்டுகிறது. இதுதான் இஸ்லாத்தின் அணுகுமுறை மனித குலத்திற்கு மாபெரும் அருட்கொடையாக இஸ்லாம் சிறந்து விளங்குவதற்கு இதுவும் ஓர் முக்கிய காரணமே.
விருந்தினருக்கு கொடுக்க ஒரு ரொட்டித்துண்டு கூட இல்லாமல் நபி(ஸல்) அவர்கள் நாட்களை கழித்துள்ளார்கள். பல நாட்கள் அவர்களுடைய வீட்டில் அடுப்பு கூட பற்றவைக்கப்படவில்லை. தூங்கும் பொழுது கடுமையான பேரீத்த மர ஓலைகளால் வேயப்பட்ட பாயில் படுத்ததால் நபி(ஸல்) அவர்களின் முதுகில் அடையாளங்கள் பதிந்திருந்தன.
ஹந்தக் போரில் அகழை வெட்டும்பொழுது பசியுடன் நபித்தோழர்கள் முறையிட்ட பொழுது அவர்களுடன் இணைந்து அகழை வெட்டிய நபி(ஸல்) அவர்கள் தனது வயிற்றை திறந்து காட்டினார்கள் அங்கு பசியை அடக்க கற்கள் கட்டப்பட்டிருந்தன. இவ்வாறு ஏழையாகவும் வாழ்ந்த நபி(ஸல்) அவர்கள் வறுமைக்கு எதிராக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். ஆடம்பரங்கள் இல்லாத ஆர்ப்பாட்டங்கள் இல்லாத வாழ்க்கையை வாழ கற்றுத்தந்து சென்றார்கள் நபிகளார்.
சமூகத்தில் இன்று சாதாரண திருமணங்களில் கூட காணப்படும் ஆடம்பரங்கள் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையா? என்பதை குறித்து நாம் சிந்திக்கவேண்டும். பெருநாள் தினத்தில் ஆடம்பரங்களை விட்டொழித்து எளிமையாக வாழ்வதற்கான உறுதிமொழிகளை எடுக்க முஸ்லிம்கள் முன்வரவேண்டும்.
மனிதர்களுக்கும், இவ்வுலகிற்கும் தொடர்பில்லாத கற்பனைகளை போதிப்பதல்ல இஸ்லாத்தின் வரலாறு. மனிதர்களின் வாழ்வோடும், உணர்வோடும் பின்னிப் பிணைந்ததுதான் இஸ்லாத்தின் போதனைகளும், வரலாறும்.
மனிதர்களின் தியாகத்தாலும், உயிர், பொருள் இழப்புகளாலும் வளர்க்கப்பட்ட மார்க்கம். இஸ்லாத்தின் செயல்வீரர்கள் தனியாக அமர்ந்து இறைதியானத்தில் மட்டும் மூழ்கியவர்கள் அல்லர். பிலால், சுமய்யா, அம்மார், யாஸிர், கப்பாப் என துவங்கி இன்றைய ஃபலஸ்தீனின் காஸ்ஸா மக்கள் வரை கொடுமைகளையும், சித்திரவதைகளை எதிர்கொண்ட வீர மறவர்களால் தான் இஸ்லாம் எழுச்சியைப் பெற்றது. பாலைவனத்தில் கடும் சூட்டில் கிடத்தப்பட்டு பாறைக்கல்லை நெஞ்சின் மீது வைத்து அழுத்திய போதும் “அல்லாஹ் அஹத்(அல்லாஹ் ஒருவனே!) என முழக்கமிட்ட பிலாலின் மார்க்கம் இது. நெருப்புக் கங்குகளின் மேல் போட்டு மேலும் கீழுமாய் இழுக்கப்பட்டு முதுகின் சதைத் துண்டுகள் பிய்ந்து விழுந்து அந்த நெருப்பை அணைக்கும் அளவுக்கு சித்திரவதைப்பட்ட பொழுதும் ஈமானை கைவிடாத கப்பாபின் மார்க்கம் இது.வாட்கள் முழக்கமிடும் போர்க்களத்தில் வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு சென்று அங்கங்கள் எல்லாம் வெட்டப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட கண்பார்வை இல்லாத அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூமின் மார்க்கம் இது.
ஏழைகளாக இருந்தாலும், உடல் ஊனமுற்றவர்களாக இருந்தாலும் வீரத்தையும், துணிச்சலையும் இழக்காத அந்த சான்றோர்களின் மார்க்கத்தில் பிறந்த நம்மிடம் கோழைத்தனம் ஒருபோதும் குடி கொண்டுவிடக்கூடாது. நோன்பு மூலம் பெற்ற இறையச்சம் ஒரு போதும் கோழைகளையும், தாழ்வு மனப்பாண்மை கொண்டோரையும் உருவாக்காது என்பதை இந்த பெருநாள் தினத்தில் நாம் கவனத்தில் கொள்ளுதல் அவசியம்.
பலகீனர்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஆதரவாக போராட்ட கூறும் மார்க்கமே இஸ்லாம். எந்நிலையிலும் நீதியின் பக்கம் நிற்கவே முஸ்லிம்கள் ஏவப்பட்டுள்ளார்கள்.
“பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.”(அல்குர்ஆன் 4:75)
“முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)
“அல்லாஹ் அக்பர்” என்று பெருநாள் தினத்தில் முழங்கும் பொழுது அல்லாஹ்வை தவிர வேறு எவருக்கும் அஞ்சமாட்டோம் என்ற உறுதி நமக்கு பிறக்கவேண்டும்.அப்பொழுதுதான் நீதிக்காகவும், பலகீனர்களுக்காகவும் போராடும் துணிச்சல் நம்மிடம் உருவாகும்.
மத்ஹபுகள், இயக்கங்கள், தரிக்காக்கள் என மனமாச்சர்யங்களில் மூழ்கி பழிதூற்றுவதை கைவிட்டு ஒரே இறைவனை வணங்கி ஒரே இறுதி வேதத்தையும், இறுதி தூதரையும் பின்பற்றும் உன்னத சமுதாயமாக நாம் மாற இப்பெருநாளில் உறுதி மேற்கொள்வோம்.
நோன்பில் பெற்ற பாடங்களையும், குணநலன்களையும் புதிய வாழ்க்கையில் அமல்படுத்தி பழைய துர்க்குணங்களை விட்டொழித்து பேராசையையும், ஆடம்பரத்தையும் களைந்து தாழ்மையையும், எளிமையையும் கையாண்டு, அன்பால் அனைவரையும் அரவணைத்து, துயருறும் மக்களுக்கு ஆதரவாக களமிறங்கி – புத்தாடைகளை அணியும் பொழுது புது மனிதனாக மாறி பெருநாளை நாம் கொண்டாடுவோம்! இன்ஷா அல்லாஹ்..
பெருநாளில் கேட்கும் துஆக்களில் சிரியா, ஃபலஸ்தீன், சோமாலியா, மியான்மர், அஸ்ஸாம் என உலகின் பல்வேறு பகுதிகளில் அல்லலுறும் நமது சகோதர நெஞ்சங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்!
‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’ – அல்லாஹ் உங்களிடமிருந்தும் நம்மிடமிருந்தும் (நற்செயல்களை) ஏற்றுக்கொள்வானாக!
அ.செய்யது அலீ.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza