டெஹ்ரான்:சிரியா சர்வாதிகார அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி வெளியிட்டார். அரசின் மோசமான நடவடிக்கைகளின் எதிர் விளைவுதான் சிரியா எழுச்சிப் போராட்டம் என மாநாட்டில் முர்ஸி சுட்டிக்காட்டினார். ஜனநாயக நடைமுறைக்கு அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஆனால், முர்ஸியின் உரைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த சிரியா பிரதிநிதிக்குழு மாநாட்டில் இருந்து வெளிநடப்புச் செய்தது. சிரியாவில் இரத்தக் களரியான கலவரங்கள் தொடருவதை முர்ஸி விரும்புவதாக சிரியா பிரதிநிதிக் குழு குற்றம் சாட்டியது.
அணிசேரா நாடுகள் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி தனது உரையில் கூறியது: “சிரியா மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பது உலக நாடுகளின் கடமையாகும். சுதந்திரம், நீதி, சமத்துவம் ஆகியவற்றிற்காகவே சிரியா மக்கள் போராடுகின்றார்கள். அதேவேளையில், உள்நாட்டுப் போரை நோக்கி நாடு செல்லாமல் தடுக்கவேண்டும். சிரியாவில் எதிர்கட்சியினர் ஒன்றிணைய வேண்டும்.
சிரியா நெருக்கடிக்கு தீர்வு காண எகிப்து, ஈரான், துருக்கி, சவூதி அரேபியா ஆகிய நாடுகள் இணைந்து மத்தியஸ்த முயற்சியை மேற்கொள்ளவேண்டும். சிரியாவில் இரத்தக் களரியான புரட்சியை முடிவுக்கு கொண்டுவர அனைத்து உதவிகளையும் செய்ய எகிப்து தயார்.” இவ்வாறு முர்ஸி தனது உரையில் குறிப்பிட்டார்.
ஆனால், பஸ்ஸாருல் ஆஸாத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஈரான் ஆதரிக்காது என கருதப்படுகிறது. ஈரான் அதிபருடன் முர்ஸி, இருநாடுகள் இடையேயான உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை என்றும், அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனிடையே, சிரியாவில் உள்ள இத்லிபின் வடக்கு மாகாணத்தில் எதிர்ப்பாளர்கள் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக செய்தி வெளியாகியுள்ளது. அபூஸஹர் விமானநிலையத்திற்கு அருகே விமானம் நொறுங்கி விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர். ஆனால், சிரியா சர்வாதிகார அரசு இதுக்குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
0 கருத்துரைகள்:
Post a Comment