Friday, August 31, 2012

நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை: பாஜக எம்.எல்.ஏவுக்கு 28 ஆண்டு சிறை! வி.எச்.பி பயங்கரவாதிக்கு ஆயுட்கால சிறை!

Naroda Patiya- 28 yrs jail for Maya Kodnani, Bajrangi gets life term till death
அஹமதாபாத்: குஜராத்-நரோடா பாட்டியா இனக் கலவர வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனையும், வி.ஹெச்.பி பயங்கரவாதி பாபு பஜ்ரங்கிக்கு ஆயுட்கால சிறை தண்டனையும் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தின் பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி குஜராத் மாநிலத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இந்திய வரலாறு காணாதா மாபெரும் இனப்படுகொலையில் ஈடுபட்டனர்.  ஊர் ஊராக முஸ்லீம்களைக் குறி வைத்து கொலை வெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  இந்த கொடும் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். பலரை உயிருடன் தீயில் போட்டுக் கொடூரமாகக் கொன்றனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நடந்த மறுநாள் அதாவது 2002 பிப்ரவரி 29-ஆம்தேதி குஜராத் மாநிலத்தின் நரோடா பாடியா என்ற இடத்தில் நடந்த கூட்டுப் படுகொலையில் 97 முஸ்லிம்கள் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அவ்வழக்கின் மீது கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், முன்னாள் விஎச்பி அமைப்பைச் சார்ந்த ஹிந்துத்துவா பயங்கரவாதி பாபு பஜ்ரங்கி, நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.  அதேசமயம், 29 பேரை விடுவித்து அவர் உத்தரவிட்டார்.
மாயா கோட்னானி தற்போதும் பாஜக எம்.எல்.ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணை தொடங்கியது. மொத்தம் 70 பேர் மீது குற்றம சாட்டப்பட்டது. அதில் விஜய் ஷெட்டி உள்ளிட்ட 7 பேர் விசாரணைக் காலத்திலேயே இறந்து விட்டனர்.  மொத்தம்  327 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அதில் முக்கியமானவர் பத்திரிக்கையாளர் ஆசிஷ் கேதான் ஆவார்.
முதலில் 46 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர் மேலும் 24 பேரை எஸ்ஐடி சிறப்புப் படையினர் கைது செய்தனர். இவர்களில் ஜாமீனில் வெளிவந்த மோகன் நேபாளி மற்றும் தேஜாஸ் பதக் ஆகிய இருவரும் தப்பி விட்டனர். இன்னும் இவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 32 பேருக்கு என்ன தண்டனை என்பதை நீதிமன்றம் இன்று அறிவித்தது. மாயா கோட்னானிக்கு 10 மற்றும் 18 ஆண்டுகள் என மொத்தம் 28 ஆண்டுகள் சிறை தண்டனையும், பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனையும், மேலும் 7 பேருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாபு பஜ்ரங்கி தனது வாழ்நாளை சிறையிலேயே கழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza