Sunday, August 26, 2012

உலகின் தீர்க்கப்படாத மர்மம்: ‘பெர்மூடா முக்கோண’ மாய மறைவுகள்: பகுதி-5!

இறுதிப் பாகம்

முதலில் தொலைந்து போன 5 விமானங்களும், அதைத் தேடச் சென்ற மற்றுமோர் விமானமும், 6 விமானங்களிலும் இருந்த 27 பேரும் எந்தவொரு சுவடுமில்லாமல், மாயமாக மறைந்தே போயிருந்தார்கள்.
அமெரிக்க விமானப்படை விமானங்களின் மறைவுபற்றி ஆராய விசாரணைக்குழு  ஒன்றை அமைத்தது. அதில் விமானப்படை அதிகாரிகள், ஏவியேஷன் வல்லுனர்கள், விண்வெளி விஞ்ஞானிகள், ஆராய்சியாளர்கள் என்று பலர், இந்த விமானங்கள் மறைந்ததற்கு ஒவ்வொரு விதமான தியரிகளைச் சொன்னார்கள்.
விமானப்படை அதிகாரிகளால் கூறப்பட்டது, “முதலில் அனுப்பப்பட்ட 5 விமானங்களும் வானில் ஒன்றுடன் ஒன்று மோதி வீழ்ந்திருக்கலாம்” என்பதாக ஒரு சாத்தியம்.
அப்படி நடந்திருந்தால், மோதிக் கடலில் விழுந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் எங்கே? இறந்தவர்களின் உடல்கள் எங்கே? தேட அனுப்பப்பட்ட விமானம் எங்கே? என்று விசாரணைக்குழு கேட்ட கேள்விகளுக்கு, விமானப்படை அதிகாரிகளிடம் பதில் இல்லை.
விசாரணையின்போது கூறப்பட்ட அடுத்த சாத்தியம், பர்மியூடா முக்கோணப் பகுதிக்கு மேலாக, வருடத்தில் குறிப்பிட்ட ஓரிரு தினங்களில் வரும் செவ்வாய் போன்ற கிரகம் ஒன்றுக்கு, விமானங்கள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்பது.
புவியீர்ப்பு விசை வானில் ஒரு உயரம் வரையுள்ள பொருள்களை கீழ்நோக்கி இழுப்பதுபோல, குறிப்பிட்ட சில தினங்களில், குறிப்பிட்ட ஒரு கிரகத்திலிருந்து அதீத ஈர்ப்பு விசை ஏற்பட்டு விமானங்கள் மேல் நோக்கி இழுக்கப்பட்டிருக்கலாம்.
பூமியின் மேற்பரப்பில் தரையும், தண்ணீரும் இருப்பதுபோல, அந்தக் கிரகத்தின் மேற்பரப்பில் வெள்ளை நிறமான திரவம் இருக்கலாம்.
இந்தச் சாத்தியம் ஒரு ‘மே-பி’ ரகத்திலான சாத்தியமே தவிர, நிரூபிக்க முடியாத சாத்தியமாக விசாரணைக்குழுவால் பதிவு செய்யப்பட்டது.
மூன்றாவது சாத்தியம், அமெரிக்க வானியல் ஆய்வு விஞ்ஞானிகள் அடங்கிய முழு ஒன்றினால் கூறப்பட்டது.
அதன்படி, வெளிக் கிரகம் ஒன்றில் இருந்து வரும் ஆட்களின் விண்வெளிக் கலம் ஒன்று (பறக்கும் தட்டு போன்ற ஒரு சமாச்சாரம்) இந்தப் பகுதியில் உலாவலாம். பூமியில் வசிக்கும் மக்களை ஆராய்சி செய்வதற்காக அவர்கள், இவர்களை விமானங்களுடன் சேர்த்து தங்களது விண்கலங்களுக்குள் உறுஞ்சி எடுத்துச் சென்றிருக்கலாம்.
இந்தச் சாத்தியத்துக்கு ஆதாரமாக அந்த விஞ்ஞானிகள் குழு காட்டியது, பல சந்தர்ப்பங்களில் பூமியில் நடமாடிய இனம் தெரியாத விண்கலங்களும், கண்டெடுக்கப்பட்ட அவற்றின் சிறு பாகங்களும். வேற்றுக் கிரகத்திலிருப்பவர்கள் பூமிக்கு வந்து போயிருப்பதற்கு இவை சான்றுகள் என்று அவர்கள் வாதிட்டார்கள். (இந்த வேற்றுக்கிரக மனித நடமாட்டங்கள் பற்றி, சுவாரசியமான பல தகவல்கள் உள்ளன)
இதுவும் ‘நடந்திருக்கலாம்’ வகையிலான அனுமானமே தவிர, நிரூபிக்கப்படக் கூடியதல்ல என்றது விசாரணைக்குழு.
கடைசியாக ஐரோப்பிய விஞ்ஞானிகள் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் அடங்கிய ஆராய்சிக் குழு ஒன்று விசாரணைக் குழுவின் முன்னர் ஒரு சாத்தியத்தைக் கூறியது.
இன்றுவரை அந்தச் சாத்தியம் தான் விஞ்ஞானிகள் மட்டத்தில் ஓரளவு நம்பக்கூடிய சாத்தியம் என்று கூறப்படுகிறது.
பர்மியூடா முக்கோணத்தில் நடைபெறும் மாய மறைவுகளுக்கான ஊகிக்கப்பட்ட காரணங்களில், இப்போது கூறப்போகும் காரணத்தை நீங்கள் எந்த அளவுக்கு நம்புவீர்களோ தெரியாது. ஆனால், ஆச்சரியகரமாக இதுதான் விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் பலரால், இன்றுவரை நம்பப்படும் காரணம்.
அவர்களால் கூறும் காரணத்தின்படி, பர்மியூடா முக்கோணப் பகுதியில், கடலுக்கு மேலே ஒருவகையான மின்காந்த அலைகளினால் (electromagnetic waves) உருவாக்கப்படும் சக்தி இயங்குகிறது. இந்த காந்த சக்தி அலைகள் எப்போதும் இருப்பதில்லை.
காலநிலை சடுதியாக மாறும்போது, மின் காந்த அலைகள் வானில் ஒன்றுடன் ஒன்று மோதும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே இந்த அதீத சக்தி, கடலின் மேல் உள்ள வானில் உருவாக்கப்படுகின்றது.
இவர்கள் குறிப்பிடும் சக்தி என்ன செய்யுமென்றால், விண்வெளியில் சில சுருள்களை ஏற்படுத்தும். Space wraps அல்லது time wraps என்று இதை அழைக்கிறார்கள். இந்த சுருள்கள் அல்லது wraps ஏற்படும்போது, அது தோன்றும் பகுதியில் உள்ள அனைவரும் அதற்குள் சிக்கி கொள்கிறார்கள். அதாவது, கண்களுக்கு தென்படாத ஒரு கூண்டுக்குள் அடைபட்டுக் கொள்கிறார்கள்.
இந்தச் சுருளில் அடைபட்டுக் கொள்பவர்கள், வெளியே எங்கேயும் போய்விடுவதில்லை. நீங்களும் நாங்களும் இருக்கும் இதே பூமியின் பிரபஞ்ச எல்லைக்கு உள்ளேயே இருக்கிறார்கள். ஆனால், மற்றுமோர் பரிமாணத்தில் (another dimension) இருப்பார்கள். அல்லது மற்றுமோர் ‘காலத்தில்’ இருப்பார்கள்.
இதை இன்னுமோர் விதமாக சொன்னால், பர்மியூடா முக்கோணத்தில் இருந்து மாயமாக மறைந்து போகும் ஆட்களும், கப்பல், விமானம் போன்ற சாதனங்களும் இங்கேதான் இருக்கின்றன. ஆனால் எங்களது கண்களில் படாத பரிமாணம் ஒன்றில் இருக்கின்றன.
இவர்கள் சிக்கிக் கொண்ட பரிமாணம், கடந்த காலமாகவும் இருக்கலாம். எதிர்காலமாகவும் இருக்கலாம் என்கிறார்கள் சில விஞ்ஞானிகள். அதாவது மறைந்து போனவர்களில் சிலர் கடந்த நூற்றாண்டுக்கும் போயிருக்கலாம், இனி வரப்போகும் நூற்றாண்டுக்கும் போயிருக்கலாம்.
ஏற்கனவே கூறியிருந்தோம், இதை நம்புவது கடினம் என்று. ஆனால், இந்த தியரியில் பல ஆராய்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன. விஞ்ஞானிகள் மட்டத்தில் பலரால் இந்த தியரி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. Time warpகளை அடிப்படையாக வைத்து, பல சயின்ஸ் ஃபிக்ஷன்களும் எழுதப்பட்டிருக்கின்றன.
இந்த காரணத்தை விட்டால், பர்மியூடா முக்கோணத்தின் மர்ம மறைவுகளுக்கு வேறு எந்தவித காரணத்தையும் யாராலும் சொல்ல முடியவில்லை – இன்றுவரை.
உலகின் தீர்வு காணப்படாத மர்மங்களில் ஒன்றாகவே இதுவரை இருந்து வருகின்றது. பர்மியூடா முக்கோணத்தில் நடைபெற்ற ஒரேயொரு சம்பவத்தை மாத்திரம் கொடுத்திருக்கிறோம். ஆனால் இதுவரை நடைபெற்ற மாய மறைவுகள் நூற்றுக்கு மேற்பட்டவை. அத்தனையிலும் மறைந்தவை விமானங்கள், அல்லது கப்பல்கள்.
பர்மியூடா தீவு கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலேயே (1515ம் ஆண்டு) அதை ‘பேய் தீவு’ என்று கூறியதாகத் தெரிகின்றது. சேக்ஷ்பியரின் The Tempest நாடகத்தில்கூட பர்மியூடாவுக்கு ஒரு வகையான மர்ம வடிவமே கொடுக்கப்பட்டடிருக்கிறது.
பர்மியூடா முக்கோணத்தில் நடைபெறும் மறைவுகளையும், அங்கே பொதிந்திருக்கும் மர்மத்தையும் கண்டுபிடிக்கவென்று அனுப்பவைக்கப்பட்ட ஆராய்ச்சிக் குழுக்களும், மாயமாக மறைந்துபோன சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன. வட அமெரிக்காவுக்கு வெளியேயுள்ள நாடுகளின் கப்பல்களும், இந்த மர்ம இடத்திலிருந்து மறைந்திருக்கின்றன.
1950-ம் ஆண்டில் இருந்து, 1954-ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் இங்கிருந்து, ஒன்பது கப்பல்கள் மாயமாக மறைந்திருக்கின்றன. ஒன்பதில் இரண்டு கப்பல்கள் ஜப்பானியக் கப்பல்கள். ஜப்பானிய அரசும் சொந்தமாக விசாரணை எல்லாம் செய்து பார்த்தது. விடை கிடைக்கவில்லை.
1955-ம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்தக் கடற்பகுதியை ‘அபாயப் பிரதேசம்’ என்று ஜப்பானிய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அத்துடன் நிற்கவில்லை அவர்கள். கையோ மாறு-5 (Kaiyo Maru-5) என்ற நவீன வசதிகள் உடைய கப்பலில் விஞ்ஞானிகள் குழு ஒன்றை இந்தக் கடல் பகுதிக்கு அனுப்பியது ஜப்பானிய அரசு. மர்மங்களைக் கண்டுபிடிக்க அனுப்பப்பட்ட இந்த ஜப்பானிய விஞ்ஞானிகள் விசேட பயிற்சி பெற்றவர்கள். இந்த கப்பலில் சென்ற ஜப்பானிய விஞ்ஞானிகள் பர்மியூடா முக்கோணத்தின மர்மங்களைக் கண்டு பிடித்தார்களா?
இல்லை.
கையோ மாறு-5 கப்பலே, பர்மியூடா முக்கோணத்தின் கடற்பகுதியில் மாயமாக மறைந்து போனது. அதிலிருந்த பயிற்சி பெற்ற விஞ்ஞானிகள் ஒருவரது உடலோ, சிறிய உடைமையோ கூட கிடைக்கவில்லை. கப்பலின் ஒரு சிறு பலகைகூட தேடியும் கிடைக்கவில்லை.
இப்போது, ஜப்பானியர்களும், பிலிப்பின்ஸ்காரர்களும் இந்தக் கடல் பகுதியை பிசாசுக் கடல் என்கிறார்கள்.
மர்மம் தொடர்கிறது… இன்றுவரை!

முற்றும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza