Friday, August 24, 2012

உளவுத்துறை கடத்திய விமானம்:பகுதி-3!

இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் திட்டமிட்டு நடத்திய விமானக் கடத்தல் 3 பாகம் நியூஸ் ஸ்டோரியின், இறுதிப் பாகம் இது. 1-ம், 2-ம் பாகங்களை தவற விட்டிருந்தால், இங்கே கிளிக் செய்து படிக்கவும்!
முனீர் செலுத்திய விமானத்தின் நகர்வை ஈராக்கின் தரை எல்லைப்புற கட்டுப்பாட்டு மையம் ஒன்றின் ரேடாரில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் குழம்பிப் போனார்கள். தரையிலிருந்து விமானத்துக்கு ரேடியோ தொடர்பை ஏற்படுத்த முயன்றார்கள்.

இதுதான், ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி 1966-ல் கடத்தப்பட்ட விமானம்.
முனீர் பதிலளிக்கவில்லை.
கொஞ்சம் தாமதமாகத்தான் கீழேயிருந்த ஆட்களுக்கு நடக்கும் விபரீதம் புரிந்தது. அதற்குள் முனீரின் விமானம் துருக்கி எல்லைக்கு மிக அருகில்  பறந்து கொண்டிருந்தது.
துருக்கிக்கு அருகிலுள்ள ஈராக்கின் எல்லை ராணுவ முகாம் ஒன்றில் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் இருந்தன. ஆனால் அவை சுடக்கூடிய ரேஞ்சைவிட அதிக உயரத்துக்கு விமானத்தை உயர்த்தி விட்டிருந்தார் முனீர். எனவே, தரையில் சுடுவதால் பலனில்லை.
கீழே உள்ளவர்களுக்கு இருந்த ஒரேயொரு வழி, வேறு போர் விமானங்களை அனுப்பி, வானில் வைத்து முனீரின் விமானத்தைத் தாக்குவது.
அதையும் அவசர அவசரமாக முயன்றது ஈராக் விமானப்படை.
உடனடியாக ஈராக் விமானப்படையின் இரண்டு போர் விமானங்கள் வானத்துக்கு அனுப்பப்பட்டன. அவை மேலேறி முனீரின் விமானத்தை சுடக்கூடிய தூரத்தில் நெருங்குவதற்கு முன்னர், முனீரின் விமானம் ஈராக்கின் வான் எல்லையைக் கடந்து, துருக்கி நாட்டு வான் எல்லைக்குள் பிரவேசித்தது.
ஆபரேஷனை திட்டமிட்டு, வெற்றிகரமாக முடித்த இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் தலைவர் அமிட் மெய்ரின் இளமைத் தோற்றம்.
துரத்திச் சென்ற இரு விமானங்களும் துருக்கி எல்லைக்குள் நுழையாமல், ஒரு வட்டமடித்து, மீண்டும் ஈராக்குக்குள்ளே திரும்பிச் செல்ல வேண்டியதாகி விட்டது.
துருக்கி நாட்டுக்குள் மிக்-21 விமானம் நுழைந்த மூன்றாவது நிமிடமே, வேறு இரு போர் விமானங்கள் தனது இடது புறமும் வலது புறமும் நெருங்கி  பறக்கத் துவங்கியதை முனீர் பார்த்தார். ஒருவேளை ஈராக் விமானப்படை விமானங்கள்தான் இன்னமும் துரத்துகிறார்களோ என்று உற்றுப் பார்த்தால், இரு புறமும் வந்த விமானங்கள் இஸ்ரேலிய விமானப்படையின் விமானங்கள்.
அவை முனீரின் விமானத்துக்குப் பாதுகாப்பு கொடுத்து, முனீரை திசை திரும்பச் செய்து, துருக்கியின் விமானப் படைத் தளமொன்றில் தரையிறங்கும்படி சிக்னல் கொடுத்தன.
அந்த லேன்டிங், முனீருக்கும் அவசியமாக இருந்தது. அதிக உயரத்திலும், பிளைட் பிளானைவிட அதிக தூரத்துக்கும் பறந்ததால், அவரது விமானத்திலிருந்த எரிபொருள் கணிசமாகக் குறைந்து போயிருந்தது. எனவே அவரும் தனது விமானத்தை, துருக்கி விமானப் படைத் தளத்தில் இறக்கினார்.
அங்கே ஏற்பாடுகள் கனகச்சிதமாகச் செய்யப்பட்டடிருந்தன. இவரது விமானம் ரன்வேயில் ஓடி நிறுத்தப்பட்டதும், துருக்கி விமானப் படையைச் சேர்ந்தவர்கள் எதுவித கேள்வியும் இல்லாமல் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பினார்கள்.
அதுவரை அமைதியாக இருந்த ரேடியோ உயிர்பெற, துருக்கியிலுள்ள அமெரிக்க ராணுவ முகாமிலிருந்து பேசுவதாக ஒரு குரல் கூறியது. விமானத்தை டேக்-ஆஃப் செய்து, இஸ்ரேலின் வான் எல்லைக்குள் செல்லும்படி கூறினார்கள்.
மொசாத் உளவுத்துறையில் இருந்து ஓய்வுபெற்றபின், வயதான தோற்றத்தில் அமிட் மெய்ர். (இடதுபுறம் இருப்பவர்)
விமானம் ஈராக்கில் இருந்து கடத்தப்படுவது அமெரிக்காவுக்காக என்றுதான் முனீர் அதுவரை நினைத்திருந்தார். துருக்கியில் எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர், ஐரோப்பிய நாடு ஒன்றிலுள்ள அமெரிக்க விமானப்படை தளத்துக்கு வரச் சொல்லுவார்கள், அங்கே வைத்து விமானத்தை அமெரிக்கர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்றுதான் அவர் நினைத்துக் கொண்டிருந்தார்.
அமெரிக்கர்களுக்கு, ரஷ்ய தயாரிப்பான மிக்-21 பரிச்சயமில்லாத விமானம். எனவே, சில வேளைகளில் விமானத்தை ஓரிரு நாட்களின் பின்னர் தம்மையே அமெரிக்கா வரை செலுத்தும்படி கேட்டுக் கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்றும் ஒரு எண்ணம் அவரிடம் இருந்தது.
இரண்டும் இல்லாமல், விமானத்தை இஸ்ரேலிய வான் எல்லைக்குள் கொண்டு செல்லும்படி கூறியது, முனீருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
ஒருவேளை இந்த விவகாரத்தை அதி ரகசியமாக வைத்துக் கொள்ள விரும்பிய அமெரிக்கர்கள், தங்களது ஐரோப்பிய விமானத் தளங்கள் எதையும் இதற்காக உபயோகிக்க விரும்பவில்லையோ? அமெரிக்கர்களும், இஸ்ரேலியர்களும் நண்பர்கள் என்பதால், இஸ்ரேலிய போர் விமானங்கள் பாதுகாப்பு கொடுக்கின்றனவோ என்று நினைத்துக் கொண்டார்.
இவர்தான் ஈராக்கிய விமானி முனிர். மேலே இருப்பது, அவர் விமானத்தை கடத்திய நாட்களில் எடுக்கப்பட்ட போட்டோ. கீழேயுள்ளது 1998-ல் அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட போட்டோ.
எப்படியும் அவருக்கு வேறு சாய்ஸ் எதுவும் இருக்கவில்லை. ஈராக்கை விட்டு வெளியே வந்தாகி விட்டது. அதுவும் சும்மா வரவில்லை. ஒரு விமானத்தைக் கடத்திக் கொண்டு வந்தாகி விட்டது. குடும்பத்தினரையும் இவர்களை நம்பி ஒப்படைத்தாகி விட்டது. இனி, இவர்கள் சொல்வதைக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.
துருக்கி விமானத் தளத்திலிருந்து முனீரின் விமானம் கிளம்பி, இஸ்ரேலை நோக்கிப் பறக்கத் தொடங்கியது. மீண்டும் இரு இஸ்ரேலிய விமானப் படையின் போர் விமானங்கள் இருபுறமும் பாதுகாப்பு கொடுத்தபடி பறந்து வந்தன.
முனீர் செலுத்திய மிக்-21 விமானம் இஸ்ரேலிய வான் எல்லைக்குள் நுழைந்தபோது, மீண்டும் விமானத்திலிருந்த ரேடியோ உயிர் பெற்றது.
“வெல்கம் டு இஸ்ரேல். உங்கள் குடும்பத்தினர் உங்கள் வருகைக்காக இங்கே ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.”
அடுத்த அரைமணி நேரத்தில் முனீர் செலுத்திச் சென்ற விமானம் இஸ்ரேலின் வடபகுதியிலுள்ள விமானப்படைத் தளம் ஒன்றில் தரையிறங்கியது.
அந்த நிமிடத்திலிருந்து இஸ்ரேல், மத்திய-கிழக்கு நாடுகளிடையே ராணுவ ரீதியில் பலமான ஒருநாடாக மாறியது. மொசாத் என்ற உளவு அமைப்பை மற்றய நாட்டவர்கள் பிரமிப்புடன் பார்க்கத் தொடங்கினார்கள்.
மொசாத் உளவுத்துறைக்குள் இந்த ஆபரேஷனை திட்டமிட்டு, வெற்றிகரமாக முடித்துக் கொடுத்த Amit Meir, மொசாத்தின் சர்வ வல்லமை பொருந்திய தலைவராக வளரத் துவங்கினார்.
விமானத்தைக் கடத்திவந்த முனீருக்கு, விமானம் கடத்தப்பட்டது அமெரிக்காவுக்காக அல்ல – இஸ்ரேலுக்காக என்று தெரியவந்தபோது ஆரம்பத்தில் கொஞ்சம் கோபப்பட்டார். ஆனால் இஸ்ரேலியர்கள், முனீரைச் சமாதானப்படுத்தி விட்டார்கள். அவர்களுக்கும் முனீர் தேவைப்பட்டார் – அவர்களிடம் மிக்-21 விமானத்தில் பயிற்சி பெற்ற விமானிகள் யாருமில்லாத காரணத்தால்!
மொசாத்தின் உதவியுடன் இஸ்ரேலில் குடும்பத்துடன் குடியேறினார் முனீர்.
அவருக்கு மாதாமாதம், ஒரு இஸ்ரேலிய விமானப்படை விமானிக்கு கொடுக்கப்படும் அளவிலான ஊதியம், அவர் ஓய்வு பெறும்வரை வழங்கப்பட்டது. அதன்பின் ஓய்வூதியம்! கடந்த 1998-ல் இஸ்ரேலில் இயற்கை மரணமடைந்தார் முனீர்.

THE END.

நன்றி: விறுவிறுப்பு.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza