Friday, July 27, 2012

கூட்டம் வராததால் டென்ஷன்... பத்திரிக்கையாளர்ளை தாக்கிய அன்னா ஆதரவாளர்கள்!

Thin crowd at Team Anna fast
டெல்லி: அன்னா ஹஸாரே குழுவினரின் லேட்டஸ்ட் உண்ணாவிரதம் நாட்டு மக்களிடையே பெரும் கேலிப் பொருளாகி வருகிறது. கூட்டம் கொஞ்சமும் கூடாததால் கடும் கடுப்பில் உள்ள அன்னா ஆதரவாளர்கள், பத்திரிக்கையாளர்கள்தான் இதற்குக் காரணம் என்று பத்தாம்பசலித்தனமாக கருதி, இன்று செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களைத் தாக்கி தங்களது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர்.

அன்னா ஹஸாரே குழுவினரின் போராட்டங்கள் மீது தற்போது அவர்களுக்கே நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது. அதுவும் மும்பையில் சில மாதங்களுக்கு முன்பு அன்னா ஹஸாரேவே டைரக்டாக உண்ணாவிரதம் உட்கார்ந்தபோது ஈ, காக்காய்களே அதிக அளவில் அங்கு ஆதரவு தெரிவிக்க அதிகம் கூடியிருந்தன. மக்களைக் காணவில்லை. இதனால் சுருக்காக தனது போராட்டத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊருக்குப் போய் விட்டார் அன்னா. அதன் பின்னர் அவர் போராட்டத்திற்கே வரவில்லை.

இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், அன்னா குழுவினர் மறுபடியும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில் அன்னா குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அன்னாவும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார் என்ற போதிலும் அவர் உண்ணாவிரதம் இருக்கவில்லை.
வழக்கமாக ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள். ஆனால் இந்த முறை எண்ணி விடும் அளவுக்கே கூட்டம் கூடியுள்ளது. இதனால் அன்னா குழுவினர் கடும் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று அன்னா குழுவைச் சேர்ந்த சிலர் பத்திரிக்கையாளர்களிடம், குறிப்பாக பெண் செய்தியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஜீ நியூஸ் செய்தியாளர் குல்தீப் சிங்கை அன்னா ஆதரவாளர்கள் தாக்கினர். அன்னாவின் போராட்டத்திற்குக் கூட்டமே கூடவில்லை என்று ஜீ நியூஸ் தொலைக்காட்சி பெரிதாக செய்தி வெளியிட்டதால் கடுப்பாகி இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் அன்னா ஆதரவாளர்கள்.
இன்று 3வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. பல்வேறு செய்தியாளர்களிடம் செய்தி சேகரிக்க வந்திருந்தனர். போராட்டம் நடந்து வரும் இடத்தில் கூட்டம் இல்லாதது குறித்து அவர்கள் செய்தி சொல்லிக் கொண்டிருந்தனர். முற்பகல் 11 மணியளவில் வெறும் 300 பேர் மட்டுமே இருந்தனர். ஆங்காங்கே பெரிய இடைவெளியுடன் போராட்டக் களம் காணப்பட்டது.
உண்ணாவிரதம் இரு்நது வரும் அரவிந்த் கேஜ்ரிவால் சற்று சோர்வாக காணப்பட்டார். அன்னா உட்கார்ந்திருந்தார். மனீஷ் சிசோடியா, கோபால் ராய் ஆகியோரும் இருந்தனர். கிரண் பேடியைக் காணவில்லை. தான் புனேவுக்குப் போயுள்ளதால் உண்ணாவிரதத்திலிருந்து பிரேக் எடுத்துள்ளதாக அவர் டிவிட்டர் மூலம் செய்தி சொல்லியிருந்தார்.
இந்த நிலையில், அன்னா ஹஸாரே பேச ஆரம்பித்தபோது மேடைக்குக் கீழே இருந்த சிலர் செய்தியாளர்களிடம் சேட்டை பண்ண ஆரம்பித்தனர். தேவையில்லாமல், செய்தியாளர்களை தள்ளிப் போகுமாறு தள்ளி விட்டனர். பெண் செய்தியாளர்களையும் அவர்கள் தொட்டுத் தள்ளி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த செய்தியாளர்கள் அங்கிருந்த போலீஸாரிடமும், அன்னா குழுவினரிடமும் புகார் செய்தனர். இதையடுத்து அன்னா குழுவினர் இறங்கி வந்தனர். தகராறில் ஈடுபட்டவர்கள் தங்களது ஆதரவாளர்கள் இல்லை என்றும் வேண்டும் என்றே குழப்பம் விளைவிக்க வந்த விஷமிகள் என்றும் அவர்கள் கூறினர்.
இதையடுத்து பத்திரிக்கையாளர்களிடம் விஷமம் செய்த ஒரு நபரைப் பிடித்து அன்னா குழுவினரிடம் ஒப்படைத்தனர் செய்தியாளர்கள்.
ஏற்கனவே கூட்டம் வராத நிலையில் அன்னா குழுவினர் கடும் எரிச்சலில் உள்ளனர். இந்த நிலையில் பத்திரிக்கையாளர்கள் உண்மை நிலையை சொல்லி வருவதால் அவர்களது ஆத்திரம் பத்திரிக்கையாளர்கள் மீது திரும்பியுள்ளது. ஆனால் உருப்படியான வகையில் எந்தப் போராட்டமும் நடைபெறாமல் பப்ளிசிட்டி ஸ்டண்ட் போல அன்னா குழுவினர் நடந்து கொள்வதாலும், அக்குழு உறுப்பினர்களிடையே கடும் ஈகோ பிரச்சினைகள் இருப்பதாலும்தான் அன்னா குழுவினர் மீதான ஆதரவு குறைந்து போய் விட்டதை அவர்கள் உணர்வதாக இல்லை.
இதன் காரணமாகவே அன்னாவே உண்ணாவிரதம் இருந்தபோதும் கூட மக்கள் கூட்டம் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வரவில்லை. இப்போதும் கூட மக்கள் ஆதரவு வெகுவாக குறைந்தது குழுவினரின் குழப்பமான போக்கே காரணம் என்றும் கூறப்படுகிறது.
நேற்று அன்னா குழுவினர் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு பகிரங்கமாகவே வேண்டுகோள் விடுத்தனர். தாய்மார்கள், இல்லத்தரசிகள், பெண்கள் தங்களது போராட்டத்திற்கு ஆதரவாக திரண்டு வர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்படி விடுத்தும் கூட கூட்டம் சேராததால் அன்னா குழுவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதற்கிடையே, இன்று பிற்பகலுக்கு மேல் யோகா குரு பாபா ராம்தேவ் தனது பரிவாரத்துடன் இங்கு உண்ணாவிரதம் இருக்க வரப் போகிறாராம். அப்போதாவது அவரது ஆதரவாளர்கள் திரண்டு வருவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza