Sunday, July 29, 2012

இனிக்கும் இல்லறம் -7

இனிக்கும்இல்லறம்1
மகிழ்ச்சியான குடும்பத்தை கட்டியெழுப்புவது எப்படி?
ஒரு சமூகத்தில் தனிமனிதனுக்கு அடுத்த ரோலை வகிப்பது குடும்பங்கள் ஆகும். ஆகவே குடும்பத்தில் ஏற்படும் நேரான, எதிர்மறையான நடத்தைகள் அக்குடும்பம் சார்ந்திருக்கும் சமூகத்திலும் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. ஆகவே, ஆண்-பெண் இருபாலரின் ஆளுமைத் தன்மைகள் இனங்காணப்படல் வேண்டும்.
ஒரு குடும்பத்தில் கணவனைப் பொறுத்தவரை மகிழ்ச்சியை தேடுபவனாகவும், மனைவியை பொறுத்தவரை அன்பை நேசிப்பவளாகவும் தங்களது இயற்கையான தன்மையை வெளிப்படுத்துகின்றனர். கணவனது தேடுதலும், மனைவியின் நேசித்தலும் ஆகிய இரு காரணிகளின் இறுதி விளைவு சந்தோஷமாக இருக்கவேண்டும். இதனை நாம் ஏற்றுக்கொள்ளாதவரை மகிழ்ச்சியான குடும்பத்தை கட்டியெழுப்புவது சிரமமே!

உளவியலாளர்களின் கூற்றை நாம் சற்று கவனிப்போம்!ஆண்களின் மகிழ்ச்சியின் தேடலை பெண்களும், பெண்களின் அன்பு நேசத்தை ஆண்களும் பரஸ்பரம் உணர்ந்துகொள்வதன் (feeling) மூலம் அவர்களில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் (chemical changes), உணர்வுகளாக (emotion) மாற்றமடைந்து மகிழ்ச்சியாக (happy) வெளிப்படுகின்றன. இதற்கு முரணாக உணர்ந்து கொள்ளுதல் ஏற்படுத்தும் இரசாயன மாற்றங்கள், எதிரான(negative) உணர்வுகளை ஏற்படுத்தி மகிழ்ச்சியை சீர்குலைத்துவிடும்.
மேலே விவரிக்கப்பட்ட செயற்பாடுகள் நான்கு முக்கிய அடிப்படைக் காரணிகளில் (root causes) தங்கியுள்ளன. அவையாவன உயிரியல் காரணம் (biological reason), சமூகக் காரணம் (social reason), பொருளாதாரப் பிரச்சினை (economical problem), விட்டுக்கொடுக்கும் கொள்கை (give and take policy) என்பனவாகும். இவற்றை நாம் சற்று விரிவாக பார்ப்போம்!
இப்ராஹீம் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். கை நிறைய சம்பளம். கூடவே கோபமும் அதிகம். அலுவலகத்தில் மேலதிகாரி தன்னிடம் எரிந்து விழுவதையும், கோபப்படுவதையும் எல்லாம் வீட்டில் தனது மனைவி ஸாலிஹாவிடம் கொட்டி விடுவார். ஆனால் மனைவியோ பொறுமையின் சிகரம். ஆகையால்  குடும்பத்தில் குழப்பமோ, சண்டைச்சச்சரவோ அதிகம் உருவாவதில்லை. அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்த இப்ராஹீமின் முகத்தை பார்த்தாலே ஸாலிஹாவிற்கு புரிந்துவிடும். அதற்கு ஏற்றார்போல் நடந்துக்கொள்வார். இப்ராஹீமுக்கு கோபம் அதிகம் என்றாலும் மனைவி மீது பாசத்திற்கு பஞ்சமில்லை. தனது கணவனின் கோபம் குறித்து அவனிடம் பல முறை நாசூக்காக
எடுத்துச் சொல்லியாகிவிட்டது. ம்..ஹும்… திருந்தியபாடில்லை. கோபத்தில் என்ன வார்த்தைகள் பேசுகிறோம் என்று இப்ராஹீமுக்கு புரிவதில்லை. தனது கணவனின் கோபத்தை கட்டுப்படுத்த ஐந்து நேர தொழுகையிலும் இறைவனிடம் பிரார்த்திப்பதையும் ஸாலிஹா வழக்கமாக்கிக் கொண்டார்.
இப்பொழுது நாம் விஷயத்திற்கு வருவோம். இப்ராஹீமின் கோபத்திற்கு காரணமான சூழல் உயிரியல் காரணமாக(Biological Reason) இருக்கலாம். ஏனெனில் கணவனின் குடும்ப பரம்பரையை ஆராய்ந்து அவனது இயல்புகளை மனைவியும், மனைவியின் குடும்ப பரம்பரையை ஆராய்ந்து அவளது இயல்புகளை கணவனும் புரிந்துகொண்டால்தான் மகிழ்ச்சியான குடும்பக் கட்டமைப்பு உருவாகும்.
எடுத்ததற்கெல்லாம் கோபப்படும் இப்ராஹீமை எதிர்கொள்ளும் ஸாலிஹாவின் பொறுமை, இறுதியில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும். ஒரு நாள் இப்ராஹீம் நிச்சயமாக திருந்துவார். ஸாலிஹாவின் பிரார்த்தனை வீணாகாது.
தனிமனிதர்களின் ஆளுமையில் அவர்களது பரம்பரை அலகுகள் அல்லது மரபணு அலகுகள்(Genes) 40 சதவீதத்தையும், வாழும் சூழல்(Environment) 60 சதவீதத்தையும் ஆதிக்கம் செலுத்துவதாக உளவியலாளர்கள் கணித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இப்ராஹீமின் கோபப்படும் தன்மைக்கு அவரது குடும்பத்தில் தந்தையோ அல்லது தந்தையின் தந்தையோ(பாட்டனார்) காரணமாக இருக்கலாம். அல்லது  அலுவலகத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் அவனது உள்ளத்தை தாக்கியிருக்கலாம். இதன் காரணமாக அவனிடம் கோபங்கொள்ளும் அதாவது எதற்கெடுத்தாலும் எரிந்துவிழும் தன்மை உருவாகியிருக்கலாம். அதனை மனைவி புரிந்துக்கொள்ளும் போது அங்கு அமைதியான சூழல் உருவாகிறது.சரி இப்ராஹீமின் குணமே இதுதான் என ஸாலிஹா விளங்கிக்கொண்டால் பிரச்சனை எழ வாய்ப்பில்லை. ஆனால், அதற்கு மாற்றமாக எதிர்த்துப் பேசுதல், குற்றம் சாட்டுதல், பிறந்த வீட்டில் சென்று புகார் செய்தல், பக்கத்து வீடுகளில் முறையிடுதல் போன்ற காரியங்களில் ஈடுபட்டால் என்ன ஆகும்? மகிழ்ச்சி இல்லாமல் போகும். சில வேளைகளில் விவகாரத்து வரை போக வாய்ப்புண்டு. இதைப் போன்றே மனைவியின் உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களை கணவனும் புரிந்துக்கொண்டால் இல்லறம் இனிமையாக மாறும்.
அடுத்தக் காரணியைக் குறித்து அலசுவோம்.
திருமண வீட்டிற்கு போய்விட்டு வீட்டிற்கு வந்த புஷ்ராவின் முகத்தில் எரிச்சலும் எதையோ இழந்ததை போன்ற ஏமாற்றமும் காணப்பட்டது. இதைக் கண்ணுற்ற அவளது கணவன் ஹஸன், “என்னம்மா கல்யாண வீட்டிற்கு சந்தோஷமாகத்தானே போனாய்! இப்ப என்னாச்சு!”.
“ஆமா உங்களுக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும் என் வருத்தம் உங்களுக்கு எங்கே புரியப்போவுது?” எங்கே அழுதுவிடுவாளோ என்று எண்ணும் அளவுக்கு அவளது குரலில் சோகம் இழையோடியது. “பரவாயில்லை என்ன நடந்துன்னு சொல்லு!” ஹஸன் வினவினான்.
“கல்யாண வீட்டிற்கு போய்ட்டோமேன்னு ஆயிப்போச்சு!சே!எல்லோரும் என்னை கேவலமா பார்க்கிறதா எனக்கு ஒரே உறுத்தல். நான் மட்டும்தான் இந்த 2 ஆயிரம் ரூபாய் சேலையை கட்டிட்டுப் போனேன். ஒவ்வொருத்தியும் 5 ஆயிரம், 10 ஆயிரம் மதிப்புல வாங்குன சேலைய கட்டிட்டு வந்தாளுக. எனக்குத்தான் அந்த பாக்கியம் இல்லையே!” ஏக்கப் பெருமூச்சுடன் புஷ்ரா கூறி முடித்தாள். ஹஸனுக்கு புஷ்ராவின் நோய் புரிந்துவிட்டது. “ஆமா அதுக்குத்தான் ஹிஜாபை போட்டுட்டு போன்னு சொன்னா கேட்டாத்தானே! இந்த பிரச்சனையெல்லாம் வருமா?” எனக்கூறிய ஹஸனை முறைத்துப் பார்த்த புஷ்ரா, “உங்களால விலை கூடின சேலையை வாங்கித்தர முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே! இப்படி ஹிஜாப் மேல பழியை போட்டு தப்பிக்க பார்க்காதீங்க!” புஷ்ராவின் கவலை தீர இன்னும் ஒரு வாரம் ஆகும் என மனதிற்குள் நினைத்துக்கொண்டான் ஹஸன்.
உளவியலாளர்களின் கருத்தின்படி, ‘மற்றவர்களுடன் தம்மை ஒப்பிடுதல் (comparing)’ மூலமே பல்வேறு முரணான சமூகக் காரணங்கள் மக்கள் மத்தியில் ஏற்பட்டு குடும்ப அமைதி கெடுகின்றது. இந்தக் குளறுபடியில் ஆண்களினதும், பெண்களினதும் பங்களிப்பு சமமாக இருப்பதுபோல் தோன்றுகின்றது.’ என்பதாகும்.
இங்கு கல்யாண வீட்டிற்கு சென்ற புஷ்ரா தன்னைவிட உயர் ரக சேலையை அணிந்த பெண்களோடு தன்னை ஒப்பிடுகிறாள். இதன்மூலம் ஏற்படும் கவலை தனது கணவனின் இயலாமையை எண்ணி கோபமாக மாறுகிறது. இதன் விளைவு? குடும்பத்தில் அமைதி குலைவு!
பணம் படைத்தவள் விஷேச விழாக்களில் அணிகின்ற விலைகூடிய பட்டுச் சேலையைப் போன்று, தானும் அணிய வேண்டுமென்று அவளின் பக்கத்து வீட்டு சாதாரண குடும்பத் தலைவி அவளது கணவனின் பொருளாதார தகுதிகளுக்கு அப்பால் சிந்திப்பதும், செயற்படுவதும் அபத்தமாகும். ‘அப்படியொரு சேலையை எப்படியும் வாங்கியே தீர்வது’ என்பதை அவள் உள்வாங்கிக் கொண்டால், ‘ஒப்பீடு’ என்ற சமூகக் காரணியில் அவள் சிக்கிக்கொண்டாள் என்று பொருளாகும். அந்த சேலையின் மதிப்பே தனக்கு சமூகத்தில் கௌரவத்தை ஏற்படுத்தும் என்ற மனப்பாங்கை(attitude) அவள் மறைமுகமாக உள்வாங்கிக் கொண்டாள் என்பதே யதார்த்தம். அவள் ஏற்படுத்தும் நச்சரிப்புக்கள், குத்திக்காட்டல்கள் கணவன்-மனைவி உறவை பாதிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
“என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்” என்ற மறைமுகமான – ஒப்பிடுதல் – என்ற சமூகக் காரணம் இல்லற வாழ்விற்கு இடுக்கண்ணாக மாறிவிடும். எந்த குடும்பத்தில் மற்றவர்களோடு தம்மையும் ஒப்பிடும் சமூக காரணி இல்லையோ அங்கெல்லாம் மகிழ்ச்சியான இல்லறம் உருவாகும்.
இவ்விடத்தில் இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது(ஸல்…) அவர்கள் கூறிய பொன்மொழியை குறிப்பிடுவது மிகவும் சாலச்சிறந்தது ஆகும். ஏனெனில் நபிகளாரின் இக்கூற்றை பின்பற்றினாலே பிறரோடு தம்மை ஒப்பிடும் சமூக காரணி
நம்மை விட்டும் மறைந்துவிடும்.
நபி(ஸல்…) அவர்கள் கூறினார்கள்:
உங்களை விட கீழ் நிலைமையில் உள்ளவர்களை பாருங்கள். உங்களுக்கு மேலான நிலையில் உள்ளவர்களை பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் அலட்சியமாக கருதாமல் இருப்பதற்கு துணை புரியும். (நூல்:புஹாரி,முஸ்லிம்).
அடுத்து பொருளாதார காரணி!
இன்ஷா அல்லாஹ் தொடரும்…

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza