ராமல்லா:ஃபலஸ்தீனில் ஹமாஸும், ஃபத்ஹும் இணைந்து உருவாக்கும் ஐக்கிய அரசில் பிரதமராக ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸை தேர்வுச்செய்ய கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. நடைபெறவிருக்கும் அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை கண்காணிக்க ஐக்கிய அரசு உருவாக்கப்படுகிறது. கத்தரின் தலைநகரான தோஹாவில் நடந்த ஹமாஸ்-ஃபத்ஹ் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
அப்பாஸை பிரதமராக தேர்வுச் செய்வது உள்ளிட்ட ஒப்பந்த ஷரத்துக்கள் அடங்கிய தோஹா பிரகடனத்தில் கத்தர் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் முன்னிலையில் அப்பாஸும், ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அலும் கையெழுத்திட்டனர். தோஹா பிரகடனத்தை செய்தியாளர்களின் முன்னிலையில் தலைவர்கள் வாசித்தனர்.
காஸ்ஸாவின் புனர் நிர்மாணத்தை கண்காணிப்பது சுதந்திர உறுப்பினர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் அடங்கிய இடைக்கால அரசின் பொறுப்பாகும். மே மாதம் தேர்தல் நடைபெறும் என இரு தலைவர்களும் அறிவித்த போதிலும் தேதியை தெரிவிக்கவில்லை.
தேர்தலை விரைவாக நடத்தவேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 18-ஆம் தேதி ஃபலஸ்தீனில் இதர அமைப்பினரும் கலந்துகொள்ளும் கூட்டம் எகிப்து தலைநகரான கெய்ரோவில் வைத்து நடைபெறும். இக்கூட்டத்தில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என ஃபத்ஹ் செய்தி தொடர்பாளர் அஸ்ஸாமுல் அஹ்மத் அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஹமாஸ்-ஃபத்ஹ் பிரதிநிதிகள் ஒவ்வொரு அமைப்பினருடனும் தனி தனியாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஃபலஸ்தீன் லிபரேசன் ஆர்கனைசேசனின் சட்ட உருவாக்க சபையான ஃபலஸ்தீன் நேசனல் கவுன்சிலுக்கு தேர்தலை நடத்துவது சிரமமான பணி என தலைவர்கள் கருதுகின்றனர்.
ஒருவருடத்திற்கு முன்பு ஹமாஸும், ஃபத்ஹும் ஐக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பின்னர் பல்வேறு கட்டங்களாக ஒப்பந்தத்தை அமுல் படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்தன.
0 கருத்துரைகள்:
Post a Comment