வாஷிங்டன்:அணுசக்தி திட்டத்தின் பெயரால் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை உருவாக்கும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். எண்ணெய் வளமிக்க வளைகுடா பிராந்தியத்தில் போர் ஏற்படுவது அதிகமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என என்.பி.சிக்கு அளித்த பேட்டியில் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்காவை தாக்குவதற்கு ஈரானுக்கு பலமோ, எண்ணமோ இருப்பதாக கருதவில்லை. ஈரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தூதரக ரீதியான தீர்வுதான் தேவை. வளைகுடாவில் உருவாகும் பிரச்சனைகள் அமெரிக்காவை பாதிக்கும். எண்ணெய் விலை அதிகரிப்பது பெரும் பின்னடைவாகும்.
ஈரானின் எல்லையை ஒட்டிய ஆஃப்கான் பகுதிகளில் தற்போது அமெரிக்க ராணுவம் நிறுத்தப்பட்டிருந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தையை நோக்கமாக கொண்டுள்ளோம். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்புதான் முக்கியம். ஈரான் விவகாரத்தில் தூதரக தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு ஒபாமா கூறினார்.
பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் அமெரிக்கா, போர்களை குறைக்க முடிவுச்செய்தது. ஈராக்கில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற்று, ஆஃப்கானில் அமெரிக்க படைகளின் வாபஸ் குறித்து அறிவித்த ஒபாமா, நவம்பரில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஈரான் மீதான தாக்குதலை தவிர்க்க விரும்புகிறார் என கருதப்படுகிறது.
ஈரானை தாக்க கூடாது என கோரி நேற்று முன்தினம் அமெரிக்காவில் போராட்டங்கள் நடைபெற்றன.
0 கருத்துரைகள்:
Post a Comment