ரோம்/கேரளா:இந்திய மீனவர்கள் இருவர் இத்தாலிய கப்பல் காவலர்களால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுடன் “குறிப்பிடத்தக்க சட்ட ரீதியான வேறுபாடுகள்” இருப்பதாக இத்தாலி வெளியுறவு அமைச்சர் கிலியோ டெர்ஸி கூறியுள்ளார்.
இத்தாலி கப்பலைச் சேர்ந்த இரு காவலர்களுக்கும் இந்தியச் சட்டத்திலிருந்து ‘பாதுகாப்பு’ உள்ளது. இப்போதைக்கு இரு நாடுகளுக்கும் இடையே சட்ட ரீதியான வேறுபாடுகள் உள்ளன. இந்த விவகாரத்தில் விரைவான தீர்வை எட்டுவதற்குத் தேவையான ஒத்துழைப்பு எதுவும் இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையே இல்லை’ என்று அவர் தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் ஜலஸ்டீன், பிங்கி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளத்தை ஒட்டிய கடல் பகுதியில் கடந்த 15-ம் தேதி நடந்தது. கடற்கொள்ளையர்கள் என்று கருதி இத்தாலி கப்பலில் இருந்த காவலர்கள் அவர்களைச் சுட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்னை இரு நாடுகளுக்கும் இடையேயான விவகாரமாக உருவெடுத்ததால், சுட்டவர்களைப் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
4 நாள் பேச்சுக்குப் பிறகு, இத்தாலியின் ‘என்ரிகா லெக்ஸி’ கப்பலில் இருந்த லதோர் மாஸிமிலியனோ, சல்வதோர் ஜிரோன் ஆகிய இரு காவலர்களும் கொல்லத்துக்கு அழைத்து வரப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை இரவில் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து, கொல்லம் முதல்நிலை மாஜிஸ்திரேட் கே.பி.ராய் முன்னிலையில் திங்கள்கிழமை அவர்கள் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். மகா சிவராத்திரிக்காக திங்கள்கிழமை நீதிமன்றங்களுக்கு விடுமுறை என்பதால் மாஜிஸ்திரேட்டின் வீட்டுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சார்பில் வழக்குரைஞர் வி.ஜே. மாத்யூஸ் ஆஜரானார். சம்பவம் நடந்த இடம் இந்திய எல்லைக்கு உள்பட்ட பகுதி இல்லை என்பதால், இந்தியச் சட்டம் அங்கு செல்லுபடியாகாது என்று இத்தாலி காவலர்கள் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், இதை நிராகரித்த மாஜிஸ்திரேட், அவர்கள் இருவரையும் மார்ச் 5-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
இத்தாலி காவலர்களை போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டும் என்று கேரளப் போலீஸார் சார்பில் வழக்குரைஞர் அனில்குமார் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, முதல் 3 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடந்த விசாரணை, 90 நிமிடங்கள் வரை நீடித்தது. இத்தாலி காவலர்கள் இருவரும் சீருடையிலேயே வந்திருந்தனர். அவர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் படி கொலைக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment