Tuesday, February 21, 2012

சங்கரன் கோவில்:தி.மு.க – அ.இ.அ.தி.மு.க நேரடி மோதல்

15-sankarankovil-map
சென்னை:சங்கரன்கோவில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் தி.மு.க-அ.இ.அ.தி.மு.க இடையேதான் நேரடி மோதல் நடைபெறும் என கருதப்படுகிறது.

சங்கரன்கோவில்(தனி) சட்டப்பேரவை இடைத்தேர்தல் மார்ச் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்குகிறது.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் அதிமுக தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அமைச்சர்கள் உள்பட மொத்தம் 43 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அதிமுகவால் அமைக்கப்பட்டு அவர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக சார்பில் ஜவகர் சூரியகுமார் அறிவிக்கப்பட்டு, அவரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மதிமுக வேட்பாளராக சதன் திருமலைக்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். பிப்ரவரி 24-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதுடன், அவர் 25-ம் தேதி பிரசாரத்தைத் தொடங்க உள்ளார்.

இந்தத் தேர்தலில் தேமுதிக போட்டியிடும் எண்ணத்தில் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தேமுதிக உறுப்பினர் சந்திரகுமார் பேசும்போது, “பால் விலை, பஸ் கட்டணத்தை உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அரசு ஏற்றிவிட்டது. இதைத் தேர்தலுக்கு முன்பு செய்திருந்தால் அதிமுகவின் பலம் தெரிந்திருக்கும்” என்று பேசினார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா, “சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட திராணி இருக்கிறதா?” என்று சவால் விடுத்தார். இதில் ஏற்பட்ட விவாதத்தால் மோதல் ஏற்பட்டு தேமுதிகவினர் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே விஜயகாந்த் பேட்டி அளித்தபோது, “6 மாத காலம் ஆளுநர் ஆட்சி நடைபெற வைத்து, அதற்குப் பிறகு அதிமுக தேர்தலைச் சந்திக்குமானால் நாங்களும் போட்டியிடத் தயார்” என்று கூறியிருந்தார். இப்போது அந்தச் சவாலை ஏற்கும் வகையில் விஜயகாந்த் வேட்பாளரை அறிவித்துள்ளார்.

இந்தக் கம்யூனிஸ்ட் கட்சி இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது. பல கட்சிகள் போட்டியிட்டாலும் அதிமுக, திமுக,மதிமுக, தேமுதிக இடையேதான் போட்டி ஏற்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் வைகோவின் சொந்தத் தொகுதி என்பதால் எப்படியும் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக அவர் போராடுவார் என கருதப்படுகிறது. மதிமுக சார்பில் போட்டியிட 8 பேர் மட்டும் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் சதன் திருமலைக்குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எட்டு மணி நேர காரசார விவாதங்களுக்குப் பிறகே அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்தப் பகுதி மக்களுக்கு சதன் திருமலைக்குமார் நன்கு அறிந்தவர் என்பதாலேயே அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா விடுத்த சவாலால் தேமுதிகவும் தேர்தலில் குதித்து உள்ளதில் திமுகவுக்கு ஒருவகையில் மகிழ்ச்சி என்றே கூறப்படுகிறது. மதிமுகவின் வாக்குகளை தேமுதிக பிரிக்கும் என்று கருதுகிறது. தேமுதிகவைப் பொருத்தவரை ஜெயலலிதாவின் சவாலால் தேர்தலில் போட்டியிட வேண்டிய கட்டாயம்.

ஆளுங்கட்சி என்பதால் இத்தேர்தலில் அ.தி.மு.க பணபலத்தை பயன்படுத்தும் என கருதப்படுகிறது. தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு, பால் விலை,பஸ்கட்டணம் உயர்வு, ஜாதி மோதல்கள் உள்பட பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சீராகவில்லை. இந்நிலையில் மக்களின் கோபம் அ.தி.மு.க அரசின் மீது திரும்பினாலும், பண பலம் மற்றும் அதிகார பலத்தால் அ.தி.மு.க அதனை முறியடிக்குமா?தேர்தல் கமிஷனின் நடவடிக்கை ஆக்கப்பூர்வமாக அமையுமா? என்பது குறித்து சங்கரன் கோவில் தேர்தல் முடிவை எதிர்பார்க்கும் தமிழக மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza