Wednesday, February 1, 2012

அணு உலை எதிர்ப்பாளர்கள் மீதான தாக்குதல்: எஸ்.டி.பி.ஐ உள்பட அரசியல் கட்சிகள் கண்டனம்

koodangulamall
சென்னை:நெல்லை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய நிபுணர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது இந்து முன்னணி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அரசியல் கட்சிகள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுத்தொடர்பாக சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கூடன்குளம் அணு உலைக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனநாயக ரீதியில் போராடி வருகின்றனர். இன்னும் 106 வது நாளாக இடிந்த கரை கிராமத்தில் அகிம்சை வழியில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மத்திய நிபுணர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த போராட்ட குழுவினர் மீது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

அமைதியாக நடைபெற்று வரும் போராட்டத்தை திசை திருப்பி கலவரக் காடாக்கும் இந்து முன்னணியின் முயற்சியே இது. இதன் பின்னணியில் யார் செயல்படுகிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். காங்கிரசும், இந்து முன்னணியும் இணைந்து செயல்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தங்கள் உயிருக்கு ஆபத்து என முன் கூட்டியே போராட்டக் குழுவின் புகார் தெரிவிததிருந்தும் ஏன் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றிருப்பது வருந்தத்தக்கது.

சிறுபான்மை சமுதாயம் மற்றும் ஏனைய சமுதாயத்தை சேர்ந்த அமைப்புகள் மீது கடுமை காட்டும் காவல்துறை, கலவரத்தை தூண்டும் இந்து முன்னணி போன்ற அமைப்புகளிடம் மென்மையாக நடந்து கொள்வதாலேயே இத்தகைய தைரியத்தை அவர்கள் பெறுகிறார்கள்.

எனவே காவல்துறை இந்து முன்னணி மற்றும் தாக்குதல் நடத்திய விஷமிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு கூடங்குளம் பகுதியில் அமைதியை நிலை நாட்ட உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி வெளியிட்டுள்ள அறிக்கையில்;

‘நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த அணுஉலை தொடர்பான கூட்டத்திற்கு சென்றிருந்த அணுஉலை எதிர்ப்புக் குழுவினர் மீது இந்து முன்னணியினரும், இந்து மக்கள் கட்சியினரும் நடத்திய கொலைவெறித் தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

கூடங்குளம் மக்களின் ஜீவாதாரப் பிரச்சினைக்காகப் போராடி வரும் போராட்டக் குழுவினர் மீது திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட இந்து முன்னணியினரை காங்கிரஸ்காரர்கள் பாராட்டியிருப்பது வெட்கக்கேடானது.

எதிர்கால சந்ததியினரின் வாழ்வுரிமைக்காகப் போராடிவரும் அணுஉலை எதிர்ப்பு போராட்டக் குழுவினருக்கு மாநில அரசு தகுந்த பாதுகாப்பை அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய நிபுணர் குழுவுடன் பேச சென்றவர்களை இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் தாக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தாக்கியவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அணுஉலை குறித்த மக்களின் நியாயமான அச்சத்திற்கு மதச் சாயம் பூசி திசைதிருப்பி குழப்ப இந்து முன்னணி முயற்சிக்கிறது. ஜனநாயக சக்திகள் அனைத்தும் இதற்கு எதிராக அணி திரள வேண்டும் என கேட்டுக் கொள்வதாக பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:

போராட்டம் நடத்தி வரும் உதயகுமார் உள்ளிட்டோரை ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தாக்குவதற்கு ஏற்கெனவே பலமுறை முயற்சி நடந்துள்ளது. பாதுகாப்பு கேட்டிருந்தும் போராட்டக் குழுவினர் மீது தாக்குதல் நடந்திருப்பதால் மாவட்ட நிர்வாகம், காவல் துறை அதிகாரிகள் மீதும் ஐயம் ஏற்படுகிறது.

கூடங்குளம் பிரச்னை தொடர்பாக மத்திய குழுவுடன் பேச மாநில அரசு அமைத்த குழுவினர் மீது தாக்குதல் நடந்திருப்பதால், இதை தமிழக அரசுக்கு எதிரான தாக்குதலாகக் கருதி, தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தப் பிரச்னையை மத மோதலாக மாற்ற மதவாத சக்திகள் முயற்சிக்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது. எந்தப் பிரச்னையிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதைப் பேசித் தீர்ப்பதுதான் சரியானதாக இருக்கும். மாறாக வன்முறை மூலம் தீர்வு காண்பது முறையற்றது என ராமதாஸ் கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

ஜனநாயக உரிமைகளின்படி போராடி வரும் அணு மின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தினரைக் கொலை செய்யும் நோக்கத்தோடு வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்ட குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அணுஉலைக்கு எதிரான போராட்டத்தையோ, ஜனநாயக உரிமைகளையோ வன்முறைகளின் மூலம் ஒருபோதும் அடக்கிவிட முடியாது. முன்னிலும் பன்மடங்கு ஆவேசத்துடன் போராட்டம் வீறுகொண்டு எழும் என வைகோ கூறியுள்ளார்.

பெரியார் தி.க. தலைவர் தா.செ.மணி அறிக்கை:

போராட்டக் குழுவை சாதி, மத ரீதியாக பிளவுபடுத்தி போராட்டத்தைச் சீர்குலைக்க முயற்சிகள் நடக்கின்றன.

தாக்கப்பட்ட மக்கள் எதிர்வினை ஆற்றினால், வன்முறையைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, காவல்துறையை ஏவி போராடும் மக்களை முடக்கிவிடலாம் என்ற நோக்கிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகக் கருத வேண்டியுள்ளது.

அணு உலைக்கு ஆதரவாகப் போராட விரும்புவோர் அறவழியில் போராட வேண்டும். அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுவினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொளத்தூர் மணி கேட்டுக் கொண்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza