Thursday, February 2, 2012

சிரியாவில் ஐ.நா அவசரமாக தலையிட வேண்டும் – அரபு லீக்

ஐ.நா:அரபு லீக் பரிந்துரைத்துள்ள அமைதி திட்டத்தின் மீதான ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேறுவது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ள சூழலில், சிரியாவில் நடைபெற்றுவரும் மோதலை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா சபை அவசரமாக தலையிடவேண்டும் என அரபு லீக் கோரிக்கை விடுத்துள்ளது.

அரபு லீக்கின் பொதுச்செயலாளர் நபீல் அல் அரபியும், கத்தர் பிரதமர் ஹமத் பின் ஜாஸிம் அல்தானியும் சிரியாவில் அமைதியை ஏற்படுத்த உறுதியான நடவடிக்கையை ஐ.நா மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிரியா அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் பதவி விலக கோரும் அரபு லீக்கின் சமாதான திட்டத்தை குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சிரியாவில் பஸ்ஸாருல் ஆஸாதின் அரசு அப்பாவி மக்களை தொடர்ந்து கொன்று குவித்து வரும் வேளையில் அரபு லீக் பரிந்துரைத்துள்ள அமைதி திட்டத்தை அங்கீகரிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தயாராகவேண்டும் என இருவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரஷ்யாவும், சீனாவும் அரபு லீக்கின் அமைதி திட்டத்தை அங்கீகரிக்க மறுத்து வருவதால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இத்திட்டம் நிறைவேற தடை ஏற்பட்டுள்ளது. பலப்பிரயோகம் மூலம் பஸ்ஸாருல் ஆஸாதை பதவி விலக வைக்க முடியாது என ரஷ்யாவும், சீனாவும் கூறுகின்றன. சிரியாவின் உள்நாட்டு விவகாரத்தில் பாதுகாப்பு கவுன்சில் நிபந்தனைகளை வலுக்கட்டாயமாக திணிப்பதற்கு அதிகாரமில்லை என ரஷ்யாவின் பிரதிநிதி விதலி சுர்கின் கூறுகிறார்.

இதற்கிடையே, சிரியா ராணுவமும், எதிர்ப்பாளர்களும் இடையே நேற்று நடந்த மோதலில் 25 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்களை மேற்கோள்காட்டி அல் அரேபியா தொலைக்காட்சி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza