மும்பை:ஆங்கில நாளிதழான ‘மிட் டே’ வின் க்ரைம் ரிப்போர்ட்டர் ஜோதிர்மய் டேவின் கொலை வழக்கு தொடர்பான துணை குற்றப்பத்திரிகையில் பெண் பத்திரிகையாளர் ஜிகினா வோராவின் பெயர் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி மும்பை போவை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஜே டே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜே டேவை சோட்டா ராஜன் கும்பல் கொலைச் செய்ததாக மும்பை போலீஸ் கூறியது.
ஜே டேவின் கொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தக் கொலை சம்பவத்தை விசாரித்து வரும் மும்பை போலீஸ் குற்றத்தடுப்பு பிரிவு கடந்த ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி முதல் குற்றப்பத்திரிகையை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் 12 பேர் எதிரிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் ‘ஏசியன் ஏஜ்’ பத்திரிகையின் பெண் பத்திரிகையாளரான ஜிக்னா வோராவின் பெயர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட துணைக் குற்றப்பத்திரிகையில் ஜிக்னா வோராவின் பெயர் இடம்பெற்றுள்ளது. அவர் இந்த வழக்கில் 11-வது எதிரியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மும்பை நிழல் உலகத் தாதா சோட்டா ராஜனுக்கு ஜோதிர்மய் தேவின் மோட்டார் சைக்கிள் எண், அவரது வீட்டு முகவரியை அளித்து கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்பது ஜிக்னா வோராவின் மீதான குற்றச்சாட்டு.
ஜோதிர்மய் தேவுடன் தொழில்ரீதியான போட்டியை ஜிக்னா வோரா சந்தித்து வந்தார். இதனால் ஜோதிர்மய் தேவ் கொலைக்கும், அவருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஜிக்னா வோராவை மும்பை போலீஸின் குற்றத்தடுப்பு பிரிவினர் கடந்த ஆண்டு நவம்பர் 25-ம் தேதி கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் இந்தக் கொலை வழக்குடன் அவருக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது. ஜிக்னா வோராவின் செல்போனை பறிமுதல் செய்து போலீஸார் ஆய்வு செய்ததில் சோட்டா ராஜனுடனும், ஜோதிர்மய் தேவினை கொலை செய்த கூலிப் படையினருடனும் அவர் பேசியிருந்தது தெரியவந்தது. அதுவும் ஜோதிர்மய தேவ் கொலை செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் பேசியிருந்தது உறுதியானது.
இதுபோன்ற வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் பெண் பத்திரிகையாளர் ஜிக்னா வோரா மீது மும்பை போலீஸா நடவடிக்கை எடுத்துள்ளனர். அவரது பெயரை துணைக் குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment