Friday, February 24, 2012

ராம்லீலா:ராம்தேவுக்கும், மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் கண்டனம்!

Baba Ramdev and his followers from the Ramlila Maidan
டெல்லி:ஹைடெக் யோகா குரு பாபா ராம்தேவின் ஊழக்கு எதிரான உண்ணாவிரத நாடகத்தின் போது நள்ளிரவில் போலீஸார் தடியடி நடத்தி கலைத்த  சம்பவத்தில் உச்சநீதிமன்றம், ராம் தேவிற்கும், மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாபா ராம்தேவ் குழுவினர் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 4 ம் தேதி ராம்லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரத போராட்ட நாடகம் ஒன்றை அரங்கேற்றினர்.

அன்றைய தினம் இரவு, போராட்டக் குழுவினர் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது, மைதானத்திற்குள் நுழைந்த காவல்துறையினர், அவர்கள் மீது தடியடி நடத்தினர்.

இதில், ராம்தேவ்வின் உதவியாளர் ராஜ்பாலா என்ற பெண்மணி படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதுத்தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை கடந்த ஜனவரியில் முடிவடைந்தது. இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், ஸ்வதீந்தர் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வியாழக்கிழமை தீர்ப்பை வெளியிட்டது.

தீர்ப்பில், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. அரசும், போலீஸாரும் நினைத்திருந்தால் இந்தச் சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம்.

டெல்லி போலீஸார் அதிகார துஷ்பிரயாகம் செய்துள்ளனர். மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன.

ராம்லீலா சம்பவம் அரசுக்கும், மக்களுக்கும் இடையேயான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

போலீஸ் நடவடிக்கை என்பது மக்களை அமைதிப்படுத்துவதாக இருக்க வேண்டுமேயன்றி, அமைதியைப் பங்கப்படுத்துவதாக இருக்கக் கூடாது.

இந்தச் சம்பவத்தின்போது வன்முறையில் ஈடுபட்ட பாபா ராம்தேவின் ஆதரவாளர்கள் மீதும், போலீஸார் மீதும் குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், சம்பவத்தின்போது பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். சம்பவத்தில் உயிரிழந்த ராஜ்பாலாவின் (ராம்தேவின் ஆதரவாளர்) குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்தை அரசு வழங்க வேண்டும். அதில் 25 சதவீதத்தை ராம்தேவின் டிரஸ்ட் தர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதேவேளையில் இச்சம்பவத்தில் ராம்தேவுக்கும் பொறுப்புள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியது. தனது ஆதரவாளர்களை கட்டுப்படுத்துவதில் ராம்தேவ் அலட்சியம் காட்டினார் என்று உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியது.

இந்த தீர்ப்பு குறித்து டெல்லி காவல்துறை கமிஷனர் பி.கே.குப்தா கூறுகையில், உத்தரவின்றி தடியடி நடத்திய போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்து துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின்னர் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ராம்தேவுக்கும் இதில் பொறுப்புள்ளது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குப்தா தெரிவித்தார்.

வருங்காலங்களில் டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள் போலீஸார் தெரிவிக்கும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza