புதுடெல்லி:தேசிய தீவிரவாத தடுப்பு மையம்(என்.சி.டி.சி) குறித்து பல்வேறு மாநிலங்கள் கவலையை எழுப்பி எதிர்ப்பு தெரிவிக்கும் வேளையில் அவர்களின் சந்தேகங்களை போக்குவோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தேசிய தீவிரவாத தடுப்பு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் அவர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது.
மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி காரைக்காலில் நேற்று(சனிக்கிழமை) அளித்த பேட்டியில் கூறியதாவது:
பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பதற்கு 9 மாநில முதல்வர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தீவிரவாதம் என்பது மாநிலத்துக்கு உள்பட்டதல்ல. இது உலகளாவியப் பிரச்னையாக உள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை தேசிய அளவில் தீவிரவாதத் தடுப்பு மையத்தை அமைத்து செயல்படுத்தி வருகின்றன. நமது நாட்டிலும் இதுபோன்ற மையம் இருக்க வேண்டியது அவசியம். தீவிரவாதம் குறித்த தகவல்களை அறிவதற்கான வசதிகள், நவீன கருவிகள் மத்திய அரசிடம்தான் உள்ளன. இந்த மையம் அமைப்பதை மாநில உரிமையில் தலையிடுவதாகக் கருத முடியாது. எனவே, இந்த அமைப்பின் அவசியம் கருதி, பிரதமரும், உள்துறை அமைச்சரும், இப்போது எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் முதல்வர்களுடன் பேசி பிரச்னைக்குத் தீர்வு காண்பார்கள் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், ‘எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும்.’ என்றார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், ’ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அவர்களுக்கென ஒரு நிலைப்பாடு உண்டு. இத்தகைய காரியங்களுக்கு அரசியல் நிறம் அளிக்க கூடாது’ என்று திவாரி பதிலளித்தார்.
அதேவேளையில், நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதீர்கள் என்று மத்திய அமைச்சரும், தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவருமான ஃபாரூக் அப்துல்லாஹ் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மாநில முதல்வர்களுக்கு தனது நிலைப்பாட்டை விளக்கவேண்டும். நாட்டு பாதுகாப்பு விவகாரங்களில் மத்திய அரசும், மாநிலங்களும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment