சென்னை:திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொருளாளரும், தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் மகனுமான ஸ்டாலினுக்கு 60 வயது மார்ச் 1-ஆம் தேதி நிறைவுறுகிறது. இவ்வேளையில் மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு துன்பங்களால் தமிழக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், கட்சித் தொண்டர்கள் எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
“மின் தட்டுப்பாடு, பால்விலை ஏற்றம், பஸ் கட்டண உயர்வு, பலவகையான வரிகள் உயர்வு என பல்வேறு துன்பங்களால் தமிழக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்தவிதமான முன்னேற்றத் திட்டங்களும் இல்லை. ஆனால் திமுக ஆட்சியில் கொண்டு வந்த அத்தனை நலத்திட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பொய் வழக்குகள் போட்டு திமுகவினர் சிறையில் தள்ளப்பட்டு வருகின்றனர்.
எனவே இந்தச் சூழ்நிலையில் எனது பிறந்தநாளைக் கொண்டாடத் தேவையில்லை என்பது எனது கண்டிப்பான வேண்டுகோள். என் மீது உண்மையான அன்பு கொண்ட தொண்டர்கள், நலிந்த ஏழை மக்களுக்கு எளிய வகையில் நலத்திட்ட உதவிகளை ‘இளைஞர் எழுச்சிநாள்’ என்ற பெயரில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார் ஸ்டாலின்.
0 கருத்துரைகள்:
Post a Comment