அங்காரா:கிழக்கு துருக்கியில் குறிப்பிட்ட நேட்டோ ரேடார் வழியாக கிடைக்கும் ரகசியங்களை இஸ்ரேலிடம் அளிக்க அனுமதிக்கமாட்டோம் என்று துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மது தாவூத் ஒக்லு கூறியுள்ளார்.
நேட்டோவின் வசதிகளை மூன்றாவது ஒரு நாடு, அதுவும் இஸ்ரேல் உபயோகிக்க அனுமதிக்கமாட்டோம் என்று நேட்டோவின் தலைவர் ஆண்டேர்ஸ் ஃபோக் ரஸ்மூஸனுடன் இணைந்து அங்காராவில் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தாவூத் ஒக்லு தெரிவித்தார்.
நேட்டோ ரேடாரில் இருந்து கிடைக்கும் ரகசிய தகவல்களை உபயோகித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீதான தாக்குதலுக்கு திட்டம் வகுத்துள்ளதாக நேற்று முன்தினம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. நேட்டோ நாடுகளின் பாதுகாப்பின் ஒரு பகுதியாக கூறி ரேடாரும், ராணுவம் கவசமும் துருக்கியில் நிறுவப்படுகிறது.
தென்கிழக்கு துருக்கியில் பாதுகாப்பு கவசம் நிறுவ கடந்த ஆண்டு துருக்கி கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. மேற்காசியா நாடுகளின் தாக்குதல்களை தடுக்கவே இந்த ராணுவ கவசம் என்று அமெரிக்கா கூறியது சர்ச்சையை கிளப்பியது. நேட்டோவுக்கு வசதிகளை செய்துக் கொடுத்தால் துருக்கி வருந்தவேண்டிய நிலை ஏற்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், எந்த ஒரு நாட்டையும் நாங்கள் குறிவைக்கவில்லை என்று துருக்கி பதில் அளித்தது. நேட்டோவின் திட்டத்திற்கு அனுமதி அளித்த துருக்கிக்கு நன்றி கூறுவதாக நேட்டோ தலைவர் ரஸ்மூஸன் கூறினார்.
ரேடார் வழியாக கிடைக்கும் தகவல்களை உறுப்பு நாடுகளுக்கு அளிப்போம் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஆனால், இஸ்ரேலுக்கு அளிப்போமா? இல்லையா? என்பது குறித்து பதில் அளிக்க ரஸ்மூஸன் மறுத்துவிட்டார்.
2010 ஆம் ஆண்டு காஸ்ஸா நிவாரண கப்பலை தாக்கி அநியாயமாக ஒன்பது தன்னார்வ தொண்டர்களை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்தது. இச்சம்பவம் நடக்கும் வரை துருக்கிக்கு இஸ்ரேலுடன் நல்லுறவு நீடித்தது. இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கோராததால் கடந்த ஆண்டு இஸ்ரேல் தூதரை வெளியேற்றிய துருக்கி, இஸ்ரேலுடன் ராணுவ-வர்த்தக உறவுகளை துண்டித்தது.
இந்நிலையில் நேட்டோவின் ரேடார் மற்றும் ராணுவ கவசம் அமைக்க அனுமதி அளித்துள்ள துருக்கியின் நடவடிக்கை, ஏன் இந்த விபரீத முயற்சி? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment