புதுடெல்லி:சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் மீது உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனுமான மார்கண்டேய கட்ஜு மீண்டும் தனது கண்டனத்தை பதிவுச் செய்துள்ளார்.
சமூக இணையதளமான ட்விட்டரில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையில் கட்ஜு கூறியது: கருத்து சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்றது அல்ல. மனிதன் ஒரு சமூக உயிரினம் என்பதால் சுதந்திரத்திற்கும், கட்டுபாடுகளுக்கும் இடையே குறிப்பிட்டதொரு சமநிலையை பேணவேண்டும்.
அமெரிக்காவில் கூட கருத்து சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்றது அல்ல. சமூக விருப்பங்களை முன்னிறுத்தி கருத்து சுதந்திரத்திற்கு சில கட்டுப்பாடுகள் தேவை. அமெரிக்காவில் ஒப்புக்கொள்வது இந்தியாவில் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. மேற்கத்திய நாடுகள் இந்தியாவைப் போல மதரீதியானது அல்ல. அதைப்போல மத சமூகங்களிடையேயும் இந்த வித்தியாசத்தை காணமுடியும்.
யேசுவை குறித்து அமெரிக்காவில் எவரேனும் அவதூறாக பேசினால் அது பெரிய பிரச்சனைகளை உருவாக்காது. ஆனால் இந்தியாவில் ஏதேனும் ஹிந்து, முஸ்லிம் மத தலைவர்களை குறித்து விமர்சித்தால் பிரச்சனைகள் உருவாகும் என கட்ஜு கூறியுள்ளார்.
சமூகங்கள் இடையேயான நல்லிணக்கம் மற்றும் தேச பாதுகாப்பிற்கு கருத்து சுதந்திரம் எதிராக மாறிவிடக் கூடாது என முன்னர் கட்ஜு கூறியிருந்தார்.
அரசியல் சட்டத்தின் 19(2) பிரிவு இதனைக் குறித்து குறிப்பிடுகிறது என அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

0 கருத்துரைகள்:
Post a Comment