ஸ்ரீநகர்: ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தம் மக்களின் ஒத்துழைப்புடன் நடந்தேறியது.
ஜம்மு-கஷ்மீர் அரசு, கஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள சிறைக் கைதிகளை அங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சையது அலி ஷா கிலானி தலைமையிலான தெஹ்ரீக்-இ-ஹூரியத் மாநாட்டுக் கட்சி வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதனடிப்படையில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தால், கடைகள், வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டிருந்தன. போக்குவரத்து முற்றிலுமாக பாதிப்புக்குள்ளானது. ஆயினும் ஸ்ரீநகரில் தனியார் வாகனங்கள் இயங்கின. சிறைக் கைதிகளை இடமாற்றம் செய்யும் மாநிலஅரசின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த கிலானி, இந்நடவடிக்கை முற்றிலும் பழிவாங்கும் செயல் என்று குற்றம் சாட்டினார்.
கஷ்மீர் மக்களை காயப்படுத்தும் இச்செயலைப் பார்த்துக் கொண்டு தாங்கள் சும்மா இருக்கப் போவதில்லை என்று தெரிவித்த அவர், சிறைக்கைதிகளை இடம் மாற்றுவது உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது என்று தெரிவித்தார். உறவினர்கள் கைதிகளைப் பார்ப்பதற்கு வசதியாக அவர்களை சொந்த மாவட்ட சிறைச்சாலைகளிலேயே சிறை வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment