லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் ‘லைவ் டிபேட்ஸ்’ என்ற பெயரில் சில அரசியல் கட்சிகளுக்காக தொலைக்காட்சி சேனல்கள் பிரச்சாரம் செய்வதாகவும், இதனை ‘கையூட்டு செய்தி(paid news) வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்(சி.பி.ஐ) மாநில பிரிவு தேர்தல் கமிஷனுக்கு புகார் அளித்துள்ளது.
பா.ஜ.க, பி.எஸ்.பி, காங்கிரஸ்,எஸ்.பி ஆகிய பிரபல கட்சிகளின் தலைவர்கள் தொலைக்காட்சி சேனல்களை வாடகைக்கு எடுத்ததை போல விவாதங்கள் என்ற பெயரில் பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர் என குற்றம் சாட்டி சி.பி.ஐயின் உத்தரபிரதேச மாநில செயலாளர் கிரீஷ் புகார் அளித்துள்ளார்.
“எவ்வித முக்கியத்துவம் இல்லாத பிரச்சனைகளை கூட கையில் எடுத்துக்கொண்டு அரை மணிநேரமாக விவாதம் புரிகின்றனர். இதனை மீண்டும் மீண்டும் காட்டுகிறார்கள். எவ்வித சர்ச்சையையும் பிரியங்கா காந்தி கிளப்பவில்லை என்றாலும் அமேதியில் அவருடைய பொதுக்கூட்டத்தை ஒரு நாள் முழுவதும் பல தடவை காட்டப்பட்டது.
முதல்வர் மாயாவதியின் சிறிய நிகழ்ச்சிகளை கூட உள்ளூர் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்புகின்றன. இதன் பின்னணியில் பணம் அளிக்கப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது” என குற்றம் சாட்டி கிரீஷ் தேர்தல் கமிஷனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். ஆனால்,இதுவரை தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை.
0 கருத்துரைகள்:
Post a Comment