மாலி:துப்பாக்கி முனையில் தனது பதவியை போலீசும், ராணுவமும் இணைந்து ராஜினாமா செய்ய வைத்ததாக பதவி விலகிய மாலத்தீவு முன்னாள் அதிபர் முஹம்மது நஷீத் கூறியுள்ளார். ‘நான் பதவியை காப்பாற்றுவதற்கு போராடாததால் இரத்த களறி ஏற்படவில்லை. அரசியல் வழி மூலமாக விரைவில் பதவியில் அமர்வேன்’ என நஷீத் கூறினார்.
போலீஸ் புரட்சி என கூறப்படும் ரகளையை தொடர்ந்து கடந்த செவ்வாய் கிழமை ஜனநாயக தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாலத்தீவின் முதல் அதிபரான முஹம்மது நஷீத் தனது பதவியை ராஜினாமா செய்தார். தான் பதவி விலகியது ஆட்சி கவிழ்ப்புதான் என கூறிய நஷீத், புதிய அதிபராக பதவியேற்றுள்ள முஹம்மது வஹீதிற்கு தெரிந்தே இச்சம்பவம் நடந்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். நஷீத் தற்போது போலீஸ் காவலில் இருப்பதாக கூறப்படுகிறது. நஷீதின் குற்றச்சாட்டை வஹீத் மறுத்துள்ளார்.
‘அரசியல் சாசனத்தின் சட்ட வரம்பிற்கு உட்பட்டே பதவி ஏற்றுள்ளேன். நிலையான, ஜனநாயகமான புதிய மாலத்தீவை உருவாக்க தேசிய அரசை உருவாக்க தயார்’ என வஹீத் கூறியுள்ளார்.
நஷீதை ஆட்சி கவிழ்ப்பு மூலம் பதவியில் இருந்து வெளியேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கட்சியான மாலத்தீவியன் டெமோக்ரேடிக் பார்டி தொண்டர்கள் கண்டன போராட்டங்களை நடத்தினர். இதற்கிடையே, நஷீதின் ஆட்சி காலத்தில் ராணுவம் கைது செய்த நீதிபதி அப்துல்லாஹ் முஹம்மது விடுதலைச் செய்யப்பட்டார். நஷீத் ராஜினாமா செய்து சில மணிநேரங்களில் அப்துல்லாஹ் முஹம்மது விடுதலையானார். மாலத்தீவு அரசுக்கு எதிரான போராட்டம் துவங்க காரணம், நீதிபதியின் கைதாகும்.
அதேவேளையில், மாலத்தீவு தேசிய அருங்காட்சியகத்தில் நுழைந்து ஒரு பிரிவினர் புத்த சிலையை உடைத்துள்ளனர். புதிய அரசியல் சூழலில் வன்முறைகளை வாபஸ் பெறுமாறு ஐ.நா பொது செயலாளர் பான் கீ மூன் மாலத்தீவு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment