லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்கட்டமாக நடந்த 55 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் 62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
2007 பேரவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப் பதிவில் 46.7 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. இப்போது அதைவிட கூடுதலாக 15 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் சுட்டிக் காட்டின.
பலத்த மழை காரணமாக காலையில் வாக்குப் பதிவு மந்தமாகத் தொடங்கியது. பாஸ்னி தொகுதியில் முதல் 2 மணி நேரத்தில் ஒரு வாக்குகூட பதிவாகவில்லை. இதர தொகுதிகளின் வாக்குச் சாவடிகளிலும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் மிகக் குறைவாகவே இருந்தது. மழை ஓய்ந்த பின்னர் பிற்பகலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாகக் குவிந்தனர்.
எவ்வித அசம்பாவிதமும் இன்றி தேர்தல் அமைதியாக நடைபெற்றது என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
862 வேட்பாளர்கள்: தேர்தல் நடைபெற்ற 55 பேரவைத் தொகுதிகளிலும் 1 கோடியே 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களின் வசதிக்காக 18,083 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
அதிக பதற்றம் நிறைந்த அயோத்தி பகுதி வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சில இடங்களில் வாக்குச்சாவடி வளாகத்தில் செய்தியாளர்களுக்குகூட அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் நடைபெற்ற 55 தொகுதிகளில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 862 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment