புதுடெல்லி:விமானப் படைக்காக 126 போர் விமானங்களை வாங்க ‘டஸ்ஸால் ட்ரஃபேல்’ என்ற பிரான்சு நாட்டு நிறுவனத்துடன் இந்திய விமானப்படை ரூ.52 ஆயிரம் கோடிக்கான ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய விமானப்படை இதுவரை செய்துள்ள ஒப்பந்தங்களில் மிகப்பெரிய ஒப்பந்தம் இதுவாகும்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விமான நிறுவனங்களின் கடுமையான போட்டிக்கு மத்தியில் ரஃபேல் இந்த வர்த்தகத்தை தட்டியெடுத்தது.
நவீன விமானத்தை அளிப்பதற்கு குறைந்த விலையின் அடிப்படையிலான ஒப்பந்தப் புள்ளியை ரஃபேல் அளித்தது.
ஐரோப்பிய நிறுவனமான இயாட்ஸை பிரான்சு கம்பெனியான ரஃபேல் டெண்டரில் முந்திவிட்டது. விமான வர்த்தகத்தின் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைகள் இரண்டு வாரத்திற்குள் நடைபெறும். அடுத்த நிதியாண்டில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும்.
மிக்-21 விமானங்களின் பயன்பாடு பழமையானதாக மாறிவிட்டதால் புதிய விமானங்களை இந்திய விமானப்படை வாங்குகிறது. இப்புதிய ஒப்பந்தத்தின் மூலம் இந்திய விமானப்படையின் பலம் அதிகரிக்கும். ஆனால், பெரியதொரு பொருளாதார சுமையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையுடன் ஒப்பந்தம் செய்வதில் துவக்கம் முதலே அமெரிக்காவின் லாக்கீட் மாட்டினின் எப்-16 பால்கன், போயிங்கின் எப் 18 ஹார்னட் ரஷ்யாவின் மிக்-35, ஸ்வீடனின் ஸாப் கிரிப்பன் ஆகியன களத்தில் இருந்தன.
கடந்த ஏப்ரலில் ரஃபேல் மற்றும் இயாட்ஸ் ஆகியவற்றை இந்திய பாதுகாப்புத்துறை இறுதி பேரத்திற்கு தேர்வுச் செய்தது. வானில் இருந்து வானிற்கும், தரையில் இருந்து தொடுக்கவும் வலுவான ஏவுகணைகளை கொண்டதுதான் இந்த போர் விமானங்கள். இவ்விமானத்தை தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை வழங்க அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பல நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளன.
2007-ஆம் ஆண்டு சர்வதேச அளவில் ஒப்பந்த புள்ளிகளுக்கு அழைப்பு விடுத்து போர் விமானங்கள் வாங்குவதற்கான முயற்சிகள் துவங்கின. 126 போர் விமானங்களும் ஒரே தடவையாக இந்திய விமானப்படைக்கு கிடைக்காது. முதல் 3 ஆண்டுகளில் 18 விமானங்களை கம்பெனி நேரடியாக அளிக்கும். மீதமுள்ளவை பெங்களூரில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் கம்பெனியின் வசதிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும்.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து விமானங்கள் கிடைப்பது நீண்டதொரு நடவடிக்கையாகும் என பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment