Saturday, January 21, 2012

வி.கே.சிங்கிற்கு ஆதரவான பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

sc
புதுடெல்லி:தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் வி.கே.சிங்கின் பிறந்த தேதி சர்ச்சைத் தொடர்பாக க்ரனேடியர் அசோசியேசன் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் நேற்று(வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்தது.

மேலும் இம்மனுவுடன், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகள் இதே போன்ற வழக்குகளில் தெரிவித்திருந்த கருத்துகளைப் பின் இணைப்பாகச் சேர்த்திருந்ததையும் உச்சநீதிமன்றம் கடுமையாக ஆட்சேபித்து நிராகரித்தது.

இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா, நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், ஸ்வதந்திர குமார் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் இம்மனுவை ஆராய்ந்து நிராகரித்தது.

க்ரனேடியர்கள் அசோசியேசன் சார்பாக ஆஜரான பீம்சிங் தனது வாதத்தில் கூறியதாவது: ராணுவத்தின் தலைமைத் தளபதியின் வயது தொடர்பாக சர்ச்சை எழுந்திருப்பதால் நாடே இதை கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. ராணுவ வீரர்களும் தங்களுடைய தலைவருக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டுவிட்டதே என்று வருத்தம் அடைந்திருக்கிறார்கள். எனவே இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று 1951 மே 10-ம் தேதிதான் சிங்கினுடைய பிறந்த நாள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இந்தப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:

இந்த வழக்கு ஒருவருடைய வயது பற்றியது; அதிலும் அவரே தனியாக மனு தாக்கல் செய்து நியாயம் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார். எனவே இன்னொருவர் மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

பத்திரிகைகளில் முதல் பக்கம் தலைப்புச் செய்தியாக வந்ததை அப்படியே கத்தரித்து ஒட்டியிருக்கிறார் மனுதாரர். பத்திரிகைகளில் வரும் செய்திகளையெல்லாம் பொதுநலன் மனுக்களாகக் கருதி வழக்குகளை விசாரிக்க முடியாது.

இந்த மனுதாரர் தன்னுடைய வாதங்களுக்கு வலுச் சேர்க்க, பதவியிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதிகள் இதே போன்ற வழக்குகளில் வெளியான கருத்துகளைத் தொகுத்திருக்கிறார்கள். இப்படி எதிர்காலத்தில் செய்யக்கூடாது என்றே அவர்கள் வழக்கு விசாரணையின்போது குறிப்பிட்டுள்ளனர்.

அதையும் மீறி மனுதாரர்கள் அவர்களுடைய தீர்ப்புகளின் சாராம்சங்களை ஏன் சேர்த்திருக்கிறார்கள்? இப்போது பதவியில் இருப்பவர் இதே விஷயத்தில் தானே நேரடியாக மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த நிலையில் இத்தகைய மனுவை ஏற்கவே முடியாது என்பதுதான் நீதிமன்றத்தின் நிலை.

பாதிக்கப்பட்டவர் சொல்லாமலும் அவருடைய ஒப்புதல் இல்லாமலும் அவருக்காக எப்படி ஒரு சங்கம் மனு தாக்கல் செய்ய முடியும்? இப்படியெல்லாம் அனுமதித்துக் கொண்டே போனால் என்னாவது?

பத்திரிகைகளில் வரும் தலைப்புச் செய்திகளையே ஆதாரங்களாகக் கருதி வழக்குகளை அனுமதித்தால் பிறகு நாட்டில் குழுப்பம்தான் மிஞ்சும்.

வயதுச் சான்றிதழ் வழக்கில் பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடுத்திருக்கும் நிலையில் உங்களுடைய மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு கருத்து எதுவும் தெரிவிக்க நீதிமன்றம் விரும்பவில்லை.

ராணுவத் தலைமைத் தளபதியின் வயது எது என்று நிர்ணயிப்பதற்காக இந்த நீதிமன்றம் இல்லை.

வழக்கு விசாரணைகளின்போது சில கருத்துகளைத் தெரிவித்துள்ள முன்னாள் நீதிபதிகள் இவற்றையெல்லாம் பிற்காலத்தில் யாரும் மேற்கோள் காட்டக்கூடாது என்று கூறிய பிறகும் உங்கள் மனுவோடு அவற்றையும் சேர்த்ததற்குக் காரணம் என்ன?

ராணுவத் தலைமை தளபதியின் அடிப்படை உரிமைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டிராத நிலையில், அரசியல் சட்டத்தின் 32-வது பிரிவின்படி ஒரு சங்கமே மனு தாக்கல் செய்வதை ஏற்கவே முடியாது.

தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் தேடி, பாதிக்கப்பட்டவர்தான் நீதிமன்றத்துக்கு வரவேண்டுமே தவிர அவர் சார்பில் சங்கம் ஏதும் மனு தாக்கல் செய்யக்கூடாது என்று தலைமை நீதிபதி வெளிப்படையாகவே தெரிவித்தார்.

செய்தித்தாளில் வெளியான தலைப்புச் செய்தி என்ன சொல்கிறது என்று பார்த்து நீங்கள் கேட்கிறபடி எங்களால் உத்தரவிட முடியாது, இந்த விஷயத்தில் சட்டம் என்ன சொல்கிறது என்றுதான் நாங்கள் பார்க்க முடியும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இனி எந்த மனுவிலும் முன்னாள் தலைமை நீதிபதிகள் தெரிவித்த கருத்துகளைச் சேர்த்திருந்தால் அவற்றை விசாரணைக்கே ஏற்கக்கூடாது என்றும் பதிவாளர் உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் பொதுவான கட்டளையையும் பிறப்பித்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza