கெய்ரோ:ஒரு ஆண்டிற்கு முன்பு இதைப் போன்றதொரு நாளில் தஹ்ரீர் சதுக்கத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்று திரண்ட வேளையில் உலகம் மட்டுமல்ல எகிப்திய மக்கள் கூட கற்பனைச் செய்து பார்க்கவில்லை – அது ஒரு புரட்சி காற்றாக மாறும் என.
30 ஆண்டுகள் அதிகாரத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு கட்டளைகளை பிறப்பித்த முபாரக்கின் சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்ட அக்கூட்டத்திற்கு துணிச்சல் உண்டு என யாரும் கருதவில்லை.
துனீசியாவில் புறப்பட்ட முல்லைப்பூ புரட்சியின் வாசத்தை நுகர்ந்த எகிப்திய மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்திய 18-வது நாளில் முபாரக் பதவியில் இருந்து விலகிய வேளையில் உலகம் ஆச்சரியமடைந்தது.
நேற்று தஹ்ரீர் சதுக்கத்தில் புரட்சியின் ஒரு வருடம் நினைவு தினத்தை கொண்டாட திரண்ட மக்களிடம் ஒரு வருடம் முன்பு கண்ட அதே ஆவேசமும், உணர்வும் காணப்பட்டது. தற்போதும் ராணுவ ஆட்சியில் நிழல் மாறாத எகிப்தின் ஜனநாயக கனவுகளுக்காக அவர்கள் இப்போதும் உச்சபட்ச குரலில் முழக்கங்களை எழுப்புகிறார்கள்.
ஒரு வயதான எகிப்திய புரட்சி இன்னமும் பூரணமடையவில்லை என அவர்கள் பரிதவிக்கிறார்கள்.
அவசர நிலையை வாபஸ் பெற்றது மக்களுக்கு முழு திருப்தியை தரவில்லை. ராணுவம் இப்போதும் மக்களை வீதியில் திருடர்களைப் போலவே காண்கிறது என அவர்கள் கூறுகிறார்கள்.
‘ராணுவ ஆட்சி ஒழியட்டும்! வெற்றி வரை புரட்சி! எகிப்து எங்கும் புரட்சி!’ உள்ளிட்ட முழக்கங்களை அவர்கள் எழுப்பியதாக அல்ஜஸீரா கூறுகிறது.
புரட்சிப் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த ராணுவ அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. முபாரக்கிற்கு எதிராக நடந்த போராட்டத்தில் காயமுற்றவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது. ஆனால், தஹ்ரீர் சதுக்கத்தில் இருந்து விலகாத மக்கள் ராணுவ ஆட்சி மாறவேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளனர்.
முபாரக் பதவி விலகிய பிறகு ஆட்சிக்கு வந்த ராணுவ கவுன்சிலின் தலைவர் ஹுஸைன் தன்தாவி உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும். ஹுஸ்னி முபாரக்கை விசாரணை நடத்தவேண்டும். சுதந்திரமான தேர்தலை நடத்தவேண்டும் என கோரிக்கைகளை மக்கள் முன்வைத்துள்ளார்கள்.
0 கருத்துரைகள்:
Post a Comment