மும்பை:சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு இந்தியாவில் கொலை மிரட்டல் நிலவுவதாக தங்களுக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என மஹராஷ்ட்ரா மாநில டி.ஜி.பி கெ.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்றுவரும் இலக்கிய திருவிழாவில் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கலந்துக்கொள்ள இந்தியா வருவதற்கு தாருல் உலூம் தேவ் பந்த் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் அவரது வருகை சர்ச்சையை கிளப்பியதையடுத்து திடீரென தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் உளவுத்துறை தெரிவித்ததாகக் கூறி தனது இந்திய வருகையை ருஷ்டி ரத்து செய்தார்.
இந்நிலையில் தங்களுக்கு அப்படி ஒரு தகவலே கிடைக்கவில்லை என போலீஸார் மறுத்துள்ளனர்.
இதுக் குறித்து மகாராஷ்டிர டிஜிபி கே.சுப்பிரமணியம் கூறியது: மும்பை நிழல் உலக தாதாக்களோ அல்லது கூலிப்படையினரோ ருஷ்டியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக எந்த உளவுத் தகவலும் இல்லை. அப்படியே இருந்தாலும், நாங்கள் அதை வேறுயாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியாது.
ஆனால் இது தொடர்பாக ராஜஸ்தான் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததா? அவர்கள் ருஷ்டிக்கு ஏதேனும் தகவல் அளித்தனரா? என்பது தெரியாது என்றார்.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மஹராஷ்ட்ரா, ராஜஸ்தான் மாநில உளவுத்துறையினர் அறிவித்ததாக கூறும் ருஷ்டியின் அறிக்கையை ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவின் தயாரிப்பாளர் சஞ்சய் கே.ராய் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் வாசித்து காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:
Post a Comment