Sunday, January 29, 2012

அமைதி பேச்சுவார்த்தையின் எதிர்காலம் :விரைவில் முடிவு – ஃபலஸ்தீன்

ரமல்லா:ஜோர்டான் மத்தியஸ்தம் வகித்த ஃபலஸ்தீன் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தையின் எதிர்காலம் குறித்து சில தினங்களில் முடிவு செய்யப்படும் என ஃபலஸ்தீன் உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தைக்காக ஃபலஸ்தீன் ஒப்புக்கொண்ட கால அவகாசம் கடந்த வியாழக்கிழமை முடிவுற்றது. பேச்சுவார்த்தை தோல்வியடையாமல் இருப்பதற்கான கடைசி கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா, ஐ.நா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா ஆகிய நான்கு மத்தியஸ்த குழுவுடன் தொடர்புடைய வட்டாரங்கள் கூறுகின்றன.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கான எதிர்காலம் குறித்து இன்னும் சில தினங்களில் முடிவுச் செய்யப்படும் என ஃபலஸ்தீன் விடுதலை முன்னணி(பி.எல்.ஒ)யின் உயர்மட்டக் குழு உறுப்பினர் வாஸல் அபூ யூசுஃப் தெரிவித்துள்ளார்.

ஹமாசுடன் நல்லிணக்க பேச்சுவார்த்தைக்கு ஆக்கம் கூட்டுவது தொடர்பாக ஃபலஸ்தீன் ஆணையம் பரிசீலிக்கும் என அபூ யூசுஃப் தெரிவித்தார். அடுத்த மாதம் நான்காம் தேதி நடைபெறவிருக்கும் அரபு லீக்கின் கூட்டத்திற்கு முன்னோடியாக இதுத் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என பி.எல்.ஒ அறிவித்துள்ளது.

எல்லையை வகுப்பது தொடர்பாக இஸ்ரேல் முன்வைத்த பரிந்துரைகள் தாம் பேச்சுவார்த்தையில் இருந்து வாபஸ்பெறும் சூழலை உருவாக்குவதாக ஃபலஸ்தீன் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் பரிந்துரைகள் ஃபலஸ்தீன் நாட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்புவதாகும் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேற்குகரையில் இஸ்ரேல் குடியிருப்புகளை தனியாக பிரிப்பதற்கு கட்டப்பட்ட மதில் சுவரை எதிர்கால ஃபலஸ்தீன் நாட்டின் எல்லையாக வரையறுக்க வேண்டும் என்ற பரிந்துரையை இஸ்ரேல் மத்தியஸ்தர் இஸாக் மோல்ஹா முன்வைத்தார் என பெயர் வெளியிட விரும்பாத ஃபலஸ்தீன் பிரதிநிதி தெரிவித்தார்.

கிழக்கு ஜெருசலம் நகரத்தையும், யூத குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளையும் தாங்கள் வரையறுத்துள்ள நாட்டின் எல்லைக்குள் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேல் கோரிக்கை விடுக்கிறது. ஃபலஸ்தீன் இதனை அங்கீகரிக்காது. ஃபலஸ்தீன் நாட்டு எல்லையைக் குறித்து ஆவணம் பேச்சுவார்த்தையில் தாக்கல் செய்ததாக இஸ்ரேல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, வெளியான தகவல்கள் தவறு என இஸ்ரேல் வட்டாரங்கள் கூறுகின்றன. மோல்ஹா ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஃபலஸ்தீன் மத்தியஸ்தர் ஸாஇப் இரகாத்துடன் ஐந்தாவது தடவையாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். ஆனால் பேச்சுவார்த்தையை தொடருவதற்கு உரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. ஃபலஸ்தீன் நாட்டின் எல்லையைக் குறித்து தனது முடிவை இஸ்ரேல் தாக்கல் செய்யாததால் பேச்சுவார்த்தை முடிந்ததாக ஃபலஸ்தீன் கருதுகிறது என இரகாத் கூறியிருந்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza