புதுடெல்லி:தண்டனை காலம் முடிந்த பிறகும் ஏராளமான பாகிஸ்தான் குடிமகன்கள் தற்போதும் இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தவர் உள்பட பல்வேறு வெளிநாட்டுக் கைதிகள் தண்டனைக் காலம் முடிந்த பின்னரும் விடுவிக்கப்படாமல் உள்ளது தொடர்பான இரு பொதுநலன் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன.
நீதிபதிகளான ஆர்.எம்.லோடா, ஹெச்.எல்.கோகலே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இப்பிரச்சனை தொடர்பாக மத்திய அரசை குற்றம் சாட்டியது. சில நபர்களை எவ்வித வழக்கும் பதிவுச் செய்யாமல் சிறையில் அடைத்தது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த வேளையில் நீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தது.
பல ஆண்டுகாலமாக சிறையில் வாடி வரும் அவர்கள், வெளியேறுவதற்கான நடைமுறை என்ன என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். மத்திய அரசில் உள்ள அதிகாரிகள் இது தொடர்பான கோப்புகள் மீது படுத்துத் தூங்குவதை நாங்கள் விரும்பில்லை என்று நீதிபதிகள் கோபத்துடன் தெரிவித்தனர்.
சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்காமல் உள்ளது என்? இது விஷயத்தில் மத்திய அரசின் முடிவுதான் என்ன? என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விவேக் தாங்காவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தண்டனை காலம் முடிந்த பிறகும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் சுதந்திரம் குறித்து நாங்கள் கவலைக்கொள்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். வெளிநாட்டினர் உள்பட நாட்டில் வசிப்பவர்களை அநியாயமாக சிறையில் அடைப்பது அரசியல் சாசனத்தின் 21-ஆம் பிரிவு உறுதி அளிக்கும் தனிநபர் சுதந்திரம் மற்றும் வாழ்வதற்கான உரிமையையும் மீறுவதாகும் என நீதிமன்றம் தெரிவித்தது.
0 கருத்துரைகள்:
Post a Comment