வாஷிங்டன்:ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட தாலிபான் போராளிகளின் இறந்த உடல்கள் மீது சிறுநீர் கழித்த இரண்டு அமெரிக்க ராணுவத்தினரை அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்த உடல்களை அவமதிக்கும் அமெரிக்க ராணுவ வீரர்களின் கேவலமான செயலின் வீடியோ காட்சிகள் வெளியானதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த உண்மை தெரியவந்தது.
தாலிபானின் செல்வாக்கு மிகுந்த தெற்கு ஆப்கானில் உள்ள ஹெல்மந்த் மாகாணத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான ஏழுமாத பணி வேளையில் இந்த கேவலமான செயலை அமெரிக்க ராணுவ வீரர்கள் புரிந்துள்ளனர்.
வடக்கு காரலைனாவில் உள்ள ராணுவ முகாமில் பட்டாலியன் – 3 ஐச்சார்ந்த ராணுவ வீரர்கள்தாம் இத்தகைய செயலை புரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களை குறித்த விபரங்கள் விசாரணைக் குழுவிற்கு கிடைத்துள்ளது.
தாலிபான் போராளிகளின் இறந்த உடல்கள் மீது அமெரிக்க ராணுவ வீரர்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ உண்மையானது என கூறிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
அதிபர் ஹமீத் கர்ஸாயியை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட பனேட்டா, இச்சம்பவத்திற்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment