Saturday, January 28, 2012

குஜராத்தில் மோடியை புகழ்ந்து காங்கிரஸ் விளம்பரம்

Congress advertisement in Gujarat praises Modi!
அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியை புகழ்ந்து மாநிலத்தின் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் விளம்பரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு தினத்தில் மாநிலத்தின் சில பகுதிகளில் விநியோகித்த பத்திரிகையுடன் அளித்த இரண்டு பக்க விளம்பரம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மோடி அரசின் சாதனைகளை பட்டியலிட்டு புகழாரம் சூட்டியுள்ளது காங்கிரஸ்.

மோடியின் புகைப்படத்துடன் கூடிய விளம்பரத்தில் மோடி வெற்றிகரமான இயக்கவாதி, தேர்தல் வியூகவாதி என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. மோடி உள்பட குஜராத் மாநிலத்தை ஆட்சிபுரிந்த அனைத்து முதல்வர்களின் சாதனைகளையும் எடுத்துக்காட்டும் இந்த விளம்பரத்தில் குஜராத்தை இயற்கையிலே முற்போக்கான மாநிலம் என புகழப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தை சில அரசியல் கட்சிகள் துவக்கியுள்ளன. குஜராத்தை அதிவேகமாக முன்னேறும் மாநிலமாக மாற்ற மோடி தீவிர முயற்சியை நடத்துவதாக சுட்டிக்காட்டும் காங்கிரஸ் கட்சியின் விளம்பரத்தில் பயோடெக்னாலஜி துறையை நிறுவியது, நர்மதா அணைக்கட்டின் உயரத்தை 11.64 அடியாக உயர்த்தியது ஆகியன எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் முதலீட்டாளர்கள் மாநாடு, அதிகமான குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், கிருஷி உற்சவ்(விவசாய திருவிழா), நவராத்திரி மகா திருவிழா, பட்டம் பறத்தல் திருவிழா ஆகிய நிகழ்வுகளும் இவ்விளம்பரத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வர்களான டாக்டர்.ஜீவ்ராஜ் மேத்தா, சிமன்பாய் பட்டேல், மாதவ்சிங் சோலங்கி, சங்கர்சிங் வகேலா, கேசுபாய் பட்டேல், சுரேஷ் மேத்தா ஆகியோரின் சாதனைகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

மத்திய காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் குஜராத் மாநில காங்கிரஸ் செய்துள்ள விளம்பரம் வரும் தினங்களில் தீவிரமான விவாதத்தை கிளப்பும் என கருதப்படுகிறது. முதன் முறையாக காங்கிரஸ் மோடிக்கு புகழாராம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 குஜராத்தின் முன்னேற்றம் ஒரு தனிநபருக்கு மட்டும் சொந்தமல்ல என்றும், மாநிலத்தின் துவக்கமே முன்னேற்றமானது என்றும், மாநிலத்தை ஆட்சிபுரிந்த அனைத்து முதல்வர்களும் குஜராத்தின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார்கள் என்ற செய்தியை பரப்புவதே இந்த விளம்பரத்தின் நோக்கம் என மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் தோஷி கூறுகிறார்.

தற்போதைய முதல்வர் அனைத்து வளர்ச்சிகளின் வாரிசாக உரிமை கோரும் வேளையில் உண்மையான நிலையை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காகவே இந்த விளம்பரத்தைச் செய்ததாக அவர் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza