புதுடெல்லி:பிறந்த தேதி விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராணுவ தலைமைத் தளபதி வி.கே.சிங் தாக்கல் செய்த மனுவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கை(caveat) மனுவை மத்திய அரசு சமர்ப்பித்துள்ளது.
ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங், 1951 மே 10-ம் தேதியை தனது பிறந்த நாளாக ஏற்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதை நிராகரித்த பாதுகாப்புத் துறை அமைச்சகம், அவரது பிறந்த தேதியை 1950 மே-10 என்பதையே அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்தது. இதனால், வரும் மே 31-ம் தேதி வி.கே.சிங் ஓய்வுபெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வி.கே.சிங் மனு தாக்கல் செய்துள்ளார். இது அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் மன்மோகன் சிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, ராணுவத் தலைமைத் தளபதியின் வழக்கு குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் வி.கே.சிங்கின் மனுவை எதிர்த்து ராணுவ அமைச்சகம் சார்பில், ஒரு கேவியட் மனு, நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தளபதி வி.கே.சிங் வயது சர்ச்சை குறித்து தாக்கல் செய்துள்ள மனு குறித்து, எங்களிடம் விசாரணை நடத்தாமல் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது” என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:
Post a Comment