Friday, January 27, 2012

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடினால் எண்ணெய்விலை உயரும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை

Hormuz
வாஷிங்டன்:ஈரான் அரசு ஹோர்முஸ் ஜலசந்தியை மூடினால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) எச்சரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 30 அமெரிக்க டாலருக்கும் (ரூ.1500) அதிகமாக உயரும் என்று ஐ.எம்.எப். வியாழக்கிழமை தெரிவித்தது.

இந்தப் பிரச்னை ஏற்கெனவே சுணக்கம் அடைந்துள்ள சர்வதேச பொருளாதாரத்துக்கு ஒரு ஆபத்தாக உருவெடுத்துள்ளது என்று ஐ.எம்.எப். ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

ஈரானின் அணு திட்டங்களை காரணம் காட்டி, அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிடுகின்றன. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் நாளொன்றுக்கு 15 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது. இந்நிலையில் தேவையான மாற்று ஏற்பாடு இல்லாமல் அந்நாட்டின் மீது தடைவிதித்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 20-30 சதவீதம் உயரும் என்று ஐ.எம்.எப். கூறியுள்ளது.

மேலும், ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால், அது வளைகுடா பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதிக்கும் பிரச்னையை ஏற்படுத்தும் என்றும் ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் ஜலசந்தி எண்ணெய் வளம்மிக்க வளைகுடா பகுதியை, அரபிக் கடலுடன் இணைக்கிறது. இந்த வழியாகத்தான் உலகின் 40 சதவீத எண்ணெய் வர்த்தகப் போக்குவரத்து நடைபெறுகிறது. ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப் போவதில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் இந்த வாரம் முடிவெடுத்துள்ளது. இதனால் ஈரானின் 6 லட்சம் பீப்பாய் எண்ணெய் வர்த்தகம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தியா, சீனா போன்ற நாடுகளும் ஈரானிடம் எண்ணெய் வாங்கக் கூடாது என்று மேற்கத்திய நாடுகள் நிர்பந்தித்தால் நிலைமை இன்னும் மோசமடையும். அதை ஈடுசெய்ய சவூதி அரேபியா தனது உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. எனினும் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் சவுதியின் வர்த்தகமும் பாதிக்கப்படும் என்று ஐ.எம்.எப். கூறுகிறது.

மாற்றுப் பாதையை பயன்படுத்தினாலும் அதில் சொற்பமான அளவுக்கே போக்குவரத்து நடைபெற முடியும். மேலும் அதை அமல்படுத்த காலதாமதமாகும். இதனால் போக்குவரத்து செலவு உயரும் என்று ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza