புதுடெல்லி:மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தமிழக அரசு திங்கள்கிழமை வாபஸ் பெற்றது.
மக்கள் நலப் பணியாளர்களை நீக்கி தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ம்தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்துசெய்து, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 23-ம் தேதி தீர்ப்பளித்தது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில், அரசு வெளியிட்ட ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்பே இடைக்காலத் தடை விதித்திருந்தது. இதனால், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை, கடந்த 22-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடந்த போது, உயர்நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதால் மனுவை வாபஸ்பெற தமிழக அரசு அவகாசம் கோரியது. இதையடுத்து, ஒருவாரத்துக்குள் மனுவைத் திரும்பப் பெற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதன்படி, நீதிபதிகள் டி.கே. ஜெயின், அனில் ஆர்.தவே அடங்கிய அமர்வு முன்பு தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்துவிட்டதால் வழக்கைத் திரும்பப்பெற அனுமதி கோரி தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் முகுல் ரோத்தகி முறைப்படி மனு அளித்தார். அப்போது மக்கள் நலப்பணியாளர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஹரீஷ் குமார் குறுக்கிட்டு, ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தபோது அதைத் தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்றார்.
அதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் தமிழக அரசு முறையீடு செய்யும் என தமிழக அரசு வழக்குரைஞர் பதிலளித்தார். இதையடுத்து இந்த வழக்கைத் தமிழக அரசு திரும்பப்பெற நீதிபதிகள் அனுமதி அளித்தனர். அதைத் தொடர்ந்து, அந்த வழக்கைத் தமிழக அரசு திரும்பப்பெற்றது.
0 கருத்துரைகள்:
Post a Comment