லாஸ் ஏஞ்சல்ஸ்:இரண்டு செல்ஃபோன்களின் எடைதான் மெலிண்டா இவ்வுலகில் பிறக்கும் பொழுது. ஒரு பூனைக் குட்டியை போன்ற அளவில் கையடக்கமான குழந்தையாக இருந்தாள். கண்ணை திறந்து கூட அவளால் பார்க்க முடியவில்லை. சிறிதுநேரம் கூட உயிருடன் இருப்பாள் என யாரும் கருதவில்லை.
ஆனால்,கண்ணில் எண்ணெயை ஊற்றியது போல கண்ணும் கருத்துமாக காத்திருந்த தாயார் மற்றும் மருத்துவர்கள் குழந்தையை பராமரித்தனர். இறுதியில் ஐந்து மாத காலமாக இன்குபேட்டரில் வசித்துவிட்டு மெலின்டா ஸ்டார் கிடோ என்ற சின்னஞ்சிறு குழந்தை மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் வேளையில் வரவேற்பு கம்பீரமாக இருந்தது.
வளருந்தோறும் என்னென்ன மாற்றங்கள் குழந்தையிடம் சம்பவிக்கும் என்பது உறுதியாக கூற முடியாவிட்டாலும், 6 வருடங்கள் குழந்தையை கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இக்குழந்தையின் மருத்துவ செலவுக்கு 5 லட்சம் முதல் 7 லட்சம் டாலர் வரை செலவாகி உள்ளது. ஆனால், இந்த தொகையை யார் செலுத்தினார்கள் என்பதை மருத்துவர் தெரிவிக்கவில்லை.
பிங்க் நிறத்திலான உடையை அணிந்து மூக்கில் ஆக்ஸிஜன் ட்யூப் இணைக்கப்பட்டு போர்வைக்குள் சுருண்டிருந்த மெலின்டா மருத்துவமனையை விட்டு வெளியே வரும் வேளையில் ஏராளமான கேமராக்கள் அவளை வரவேற்றன.
மகளின் வாழ்க்கை திரும்ப கிடைத்ததில் மிகவும் சந்தோசத்தில் உள்ளார் 22 வயதான தாய் ஹைடீ இபாரா. உலகிலேயே மூன்றாவது மிகவுன் சிறிய குழந்தையாக மெலின்டா கருதப்படுகிறார். அமெரிக்காவில் மெலின்டாவுக்கு இரண்டாவது இடம். உலகில் முதல் மிகவும் சிறிய குழந்தையாக கடந்த 2004-ஆம் ஆண்டு இல்லிநோய்ஸில் பிறந்த ருமைஸா ரஹ்மான் கருதப்படுகிறார். பிறக்கும் பொழுது 9.2 அவுன்ஸ் மட்டுமே அவருடைய எடையாகும். ருமைஸா தற்போது நன்றாக உள்ளார்.
பள்ளிக்கூடம் சென்று வருகிறார். இரண்டாவது குழந்தை ஜப்பானில் பிறந்தது. வருடந்தோறும் அமெரிக்காவில் அரைக் கிலோவை விட குறைந்த எடையைக் கொண்ட சராசரியாக 7500 குழந்தைகள் பிறந்த பொழுதும் 10 சதவீதம் மட்டுமே வாழ்க்கையில் தப்பி பிழைப்பதாக சுகாதார அறிக்கைகள் கூறுகின்றன.


0 கருத்துரைகள்:
Post a Comment