Tuesday, January 17, 2012

கேரளா:முஸ்லிம்களின் இ-மெயில் திருட்டுதனமாக கண்காணிப்பு – விசாரணைக்கு முதல்வர் சாண்டி உத்தரவு

email spy
திருவனந்தபுரம்:முஸ்லிம் லீக் கட்சியினர் மற்றும் முஸ்லிம் பத்திரிகையாளர்கள் உள்பட கேரள மாநிலத்தில் முஸ்லிம் பிரமுகர்களின் மின்னஞ்சல்களை திருட்டுத்தனமாக உளவுத்துறை கண்காணிப்பது தொடர்பான செய்தியைக் குறித்து அவசரமாக விசாரணை நடத்த முதல்வர் உம்மன் சாண்டி உத்தரவிட்டுள்ளார்.

இவ்விசாரணையை நடத்தும் பொறுப்பு இண்டலிஜன்ஸ் கூடுதல் டி.ஜி.பி சென்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில போலீஸ் ஸ்பெஷல் ப்ராஞ்சுகள் மின்னஞ்சல்களை திருட்டுத்தனமாக கண்காணிப்பதை மாநில உள்துறை கவுரவமாக எடுத்துள்ளது என உள்துறை கூடுதல் முதன்மை செயலாளர் கெ.ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

“இச்செய்தியை பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். இத்தகையதொரு உத்தரவை உள்துறை போலீசாருக்கு அளிக்கவில்லை. இச்செய்தியின் உறைவிடம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல் திருட்டுத்தனமாக கண்காணிக்கப்படும் செய்தி வெளியானதை தொடர்ந்து முதல்வர் உள்துறை வகுப்பு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் அவசர கூட்டத்தை கூட்டினார். நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டது. பின்னர் முதல்வர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மின்னஞ்சல் திருட்டுத்தனமாக கண்காணிக்கப்படுவது குறித்த செய்தி வெளியானதை தொடர்ந்து முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவரும், மாநில அமைச்சருமான குஞ்ஞாலிக் குட்டி முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மின்னஞ்சல்களை கண்காணிக்க உத்தரவிடவில்லை என மாநில டி.ஜி.பி ஜேக்கப் புனூஸ் கூறியுள்ளார். இதுத்தொடர்பான செய்திகள் அடிப்படையற்றவை என கூறிய புனூஸ் இச்செய்தியை முழுமையாக மறுக்கவும் தயாராகவில்லை.

இதுத்தொடர்பாக டி.ஜி.பி கூறியது: “போலீசாருக்கு சில இ-மெயில் முகவரிகள் கிடைத்தன. அதற்கு சொந்தமானவர்களை குறித்து சோதனை நடத்தப்பட்டது. இவர்களின் முழுமையான முகவரி மற்றும் தற்பொழுது இவர்களின் விபரங்களை சேகரிப்பதற்கு இந்த சோதனை நடத்தப்பட்டது. வழக்கமான நடவடிக்கைதான். மாறாக யாருடைய மின்னஞ்சல் முகவரிகளையும் திருட்டுத்தனமாக கண்காணிக்கவில்லை.

எல்லா சமூகத்தினரின் இ-மெயில்களும் இவ்வகையில் பரிசோதிக்கப்படுகின்றன. போலீஸின் ஹைடெக் செல் இப்பரிசோதனையை நடத்துகிறது. ஸ்பெஷல் ப்ராஞ்ச் பிரிவு இதுத்தொடர்பான நடவடிக்கைகளை பூர்த்திச் செய்கிறது. ஆதலால், கூடுதல் தகவல்களை தெரிவிக்க இயலாது” என்றார் புனூஸ்.

ஆனால், இ-மெயில் முகவரிகளை போலீஸ் சேகரிப்பதன் காரணம் குறித்து டி.ஜி.பி பதிலளிக்கவில்லை. இச்சம்பவம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza