Sunday, December 4, 2011

எகிப்து:வாக்குப் பதிவில் சாதனை

vote
கெய்ரோ:எகிப்து பாராளுமன்றத்திற்கு நடந்த முதல் கட்ட தேர்தலில் வாக்குபதிவு சாதனை படைத்துள்ளது. 62 சதவீதம் பேர் முதல் கட்ட தேர்தலில் வாக்களித்துள்ளதாக தேர்தல் கமிஷன் தலைவர் அப்துல் முஈஸ் இப்ராஹீம் அறிவித்துள்ளார்.

நவீன எகிப்தில் முதல் தடவையாக இவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன. கீழ் சபைக்கு முதல் கட்ட தேர்தல் நடந்த கடந்த திங்கள் கிழமை 80 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது வாக்குகளை பதிவுச் செய்துள்ளனர். அடுத்த இரண்டு கட்ட தேர்தல்கள் இம்மாதமும், அடுத்த ஜனவரியிலும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து முழுமையான முடிவுகள் வெளியாகும்.

ஒவ்வொருவரும் இத்தேர்தலில் 3 வாக்குகளை அளிக்கவேண்டும். இரண்டு வாக்குகள் சுயேட்டையான வேட்பாளர்களுக்கும், ஒரு வாக்கை கட்சி வேட்பாளருக்கும் அளிக்கவேண்டும். சுயேட்சைகளில் எவரும் பெரும்பான்மையை எட்டவில்லை என கூறிய தேர்தல் கமிஷனர் இப்ராஹீம் கட்சியில் யார் பெரும்பான்மையை பெற்றுள்ளார் என்பது குறித்து கேள்வி எழுந்தவுடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பை முடித்துவிட்டார்.

வாக்கு எண்ணிக்கை முடியவில்லை என்பதால் முடிவை அறிவிக்க காலம்தாமதம் ஏற்படும் என அதிகாரிகள் கூறினர். அதிக வாக்குகள் பதிவானதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெளியான அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின் அடிப்படையில் இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டி 3-இல் 2 பகுதி இடங்களை கைப்பற்றியுள்ளது.

மூன்று கட்ட தேர்தல்கள் முடிந்த உடனே கட்சி ரீதியான முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஸலஃபி கட்சியான அந்நூர் இரண்டாவது இடத்தையும், லிபரல் கட்சியான எகிப்திய ப்ளாக் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza