புதுடெல்லி:சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கை சி.பி.ஐ விசாரணை செய்ய உத்தரவிட்ட நீதிபதியின் நீதிதவறாமையை குறித்து கேள்வி எழுப்பியுள்ள குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவரது வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆகியோர் மீது தாமாகவே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என உச்சநீதிமன்றத்திற்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
நீதிபதியும், அரசும், சி.பி.ஐயும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக கூறும் அமித் ஷாவின் நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பாகும் என கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் கூறியுள்ளார்.
அமித்ஷாவுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சி.பி.ஐ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதிகளான அஃப்தாப் ஆலம், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு அரசு இக்கோரிக்கையை முன்வைத்தது.வழக்கு விசாரணையை குஜராத்திற்கு வெளியே உள்ள நீதிமன்றத்திற்கு மாற்றவேண்டும் என சி.பி.ஐ கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கை சி.பி.ஐ விசாரிக்கவேண்டும் என நீதிபதி தருண் சாட்டர்ஜி உத்தரவிட்டார்.மத்திய அரசு சி.பி.ஐயுடன் சேர்ந்து சதித்திட்டம் நடத்தியது நீதிபதியின் உத்தரவில் நிர்ணாயக பங்கினை வகித்ததாக உத்தரவு வெளியானபிறகு அமித் ஷா கூறியிருந்தார்.
உத்தரவு பிறப்பிக்கும் நேரத்தில் நீதிபதி தருண் பி.எஃப் ஊழல் வழக்கில் சி.பி.ஐயின் கண்காணிப்பில் இருந்ததாகவும், போலி என்கவுண்டர் வழக்கை விசாரிப்பதிலிருந்து அவரை நீக்கவேண்டும் எனவும் அமித்ஷாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறியிருந்தார்.ஆனால், குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் நெருங்கியவரான அமித் ஷாவுக்கு தனது குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை என மத்திய அரசு கூறுகிறது.
நீதிபதியின் உத்தரவை வாபஸ் பெறவேண்டும் என கோரி அமித்ஷா அளித்த மனு நீதிமன்ற அவமதிப்பாகும்.உத்தரவு பிறப்பித்த நீதிபதிக்கு அவர் ஓய்வு பெற்றபிறகு மத்திய அரசு வசதியான வேலையை அளித்துள்ளது என்ற ராம்ஜெத்மலானியின் கூற்று தவறு என கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
நீதிபதியின் உத்தரவை வாபஸ் பெறத்தேவையில்லை.உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்குகளை சி.பி.ஐதான் விசாரிக்கிறது என கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் கூறினார்.அப்பொழுது நீதிமன்றத்தில் இருந்த ராம்ஜெத்மலானி தனது வாதத்தை வாபஸ் பெறப்போவதில்லை என்றும், எதிர்விளைவுகளை சந்திக்க தயார் என்றும் தெரிவித்தார்.
அவ்வாறெனில், சி.பி.ஐ விசாரணை நடத்துவதில் நீதிபதிக்கு தனிப்பட்ட விருப்பம் இருந்தது குறித்து ஜெத்மலானி நிரூபிக்கட்டும் என கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் பதில் அளித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment