Thursday, December 1, 2011

ஈரான்:தூதரக அதிகாரிகளை வாபஸ்பெற்றது பிரிட்டன்

30tehran4_cnd-articleLarge
டெஹ்ரான்:ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பிரிட்டன் தூதரகத்தின் மீது தாக்குதல் நடந்த சூழலில் ஈரானில் பிரிட்டன் தூதரக அதிகாரிகளை அந்நாடு வாபஸ் பெற்றுள்ளது.இதனை பிரிட்டன் வெளியுறவுத்துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

துபாய்க்கு செல்வதற்காக தூதரக அதிகாரிகளின் முதல் குழு டெஹ்ரான் விமானநிலையத்திற்கு வந்துள்ளதாக ஐரோப்பிய யூனியன் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் கூறுகின்றன.ஆனால், அனைத்து தூதரக அதிகாரிகளையும் பிரிட்டன் வாபஸ் பெற்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது.

இதற்கிடையே, பிரிட்டன் தூதரகம் தாக்கப்பட்டதை தொடர்ந்து நார்வே ஈரானில் தூதரக அலுவலகத்தை மூடியுள்ளது.நார்வே வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.செவ்வாய்க்கிழமை மாணவர்கள் தலைமையில் பிரிட்டன் தூதரக அலுவலகம் தாக்கப்பட்டது.

பிரிட்டன் தூதரக கட்டிடத்திற்குள் நுழைந்த மாணவர்கள் பிரிட்டனின் கொடியை எரித்தனர்.கட்டிடத்தின் கண்ணாடிகள் கல்வீச்சில் உடைக்கப்பட்டன.முக்கிய கட்டிடம் தவிர வடக்கு டெஹ்ரானில் குடியிருப்பு காம்புவுண்டும் தாக்கப்பட்டது.

மேற்கத்திய நாடுகளின் மிரட்டலை புறக்கணித்து அணுசக்தி திட்டங்களை தொடரப்போவதாக அறிவித்த ஈரான் மீது பிரிட்டன் தடை ஏற்படுத்தியதில் கோபமுற்ற மக்கள் பிரிட்டன் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து பிரிட்டன் இத்தடையை விதித்தது.

தூதரகம் தாக்கப்பட்டதற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.தாக்குதலை அங்கீகரிக்க இயலாது என ரஷ்யா
கூறியுள்ளது.இத்தாக்குதலை குறித்து ஈரான் வருத்தம் தெரிவித்துள்ளது.சர்வதேச சட்டங்களை மதிப்பதாகவும், துரதிர்ஷ்டவசமான தாக்குதல் இதர நாடுகளின் தூதரகங்களுக்கு அச்சுறுத்தலாக அமையாது எனவும் ஈரான் பாராளுமன்றத்தின் வெளிநாட்டு-பாதுகாப்பு கொள்கை உருவாக்க குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் விமர்சனம் அவசரகதியிலானது என ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லாரிஜானி குற்றம் சாட்டியுள்ளார்.இந்த விமர்சனம் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் முன் கால செய்திகளை மறைப்பதற்காகும் என லாரிஜானி தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza