பாபரி மஸ்ஜித் என்றதும் நம் நினைவில் நிழலாடுவது சிதிலமடைந்த மூன்று கும்பங்கள் கொண்ட ஒரு கட்டடமும், பின்னர் அது மணல் மேடாகத் தகர்க்கப்பட்டதும், பயங்கரவாத ஃபாசிச ஹிந்துத்துவ கோர முகங்களும், நாடு முழுவதும் அதனையொட்டி நடந்த முஸ்லிம் இனப் படுகொலைகளும், இழந்த முஸ்லிம்களின் ரத்தமும், சதையும், அதனை மீட்டெடுப்பதற்கான முஸ்லிம்களின் நீண்டகாலப் போராட்டமும்தான்!
ஹிந்துத்துவ கயவர்கள் 1992 டிசம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜிதைச் சுற்றி குழுமியிருந்த பொழுது எப்படியும் நம்துனை இராணுவம் மஸ்ஜிதைக் காப்பாற்றிவிடும் என்ற நப்பாசை நம் இதயத்தில் ஓடியது. ஒவ்வொரு கற்களாக பாபரி தகர்க்கப்பட்ட பொழுது நம் நப்பாசையும் தகர்ந்து தரைமட்டமானது.
“மீண்டும்அதே இடத்தில் பாபரி மஸ்ஜித் கட்டித் தரப்படும்” என்று அன்றைய பிரதமர் நரசிம்மராவ் நானிலம் அறிய வாக்களித்த பொழுது மீண்டும் முஸ்லிம்களுக்கு நப்பாசை தொற்றிக்கொண்டது. ஆனால் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் அந்த நப்பாசையிலும் மண்ணை அள்ளிப் போட்டன.
இந்த நம்பிக்கைத் துரோகம் 1992ல் தொடங்கியதல்ல. மாறாக, என்று பாபரி மஸ்ஜிதின் மிம்பரில் ராமர் சிலை கள்ளத்தனமாக வைக்கப்பட்டதோ அந்த 1949-ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி இரவிலிருந்து இந்த நம்பிக்கைத் துரோகம் தொடங்குகிறது.
மார்க்கத்தின் மார்பிடத்தில் இணைவைப்பின் இழிவுச் சின்னத்தைக் கண்டபொழுது முஸ்லிம்களின் இதயங்களில் இடி விழுந்தது.
முஸ்லிம்கள் அதனைத் தூக்கியெறிந்து விட்டு இறை வணக்கங்களைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால் நீதிக்குக் கட்டுப்பட்ட முஸ்லிம்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். அங்கே அநீதி இழைக்கப்பட்டது. சிலையை அகற்றுவதற்குப் பதில் சீல் வைக்கப்பட்டது மஸ்ஜித். கண்ணியத்திற்குரிய இறையில்லத்தை “இது சர்ச்சைக்குரிய இடம்” என்று நீதிமன்றம் சொன்னது.
ராம்சந்தர் தாஸ் பரமஹம்ஸ் என்ற ஹிந்துத்துவ பயங்கரவாதி “நான்தான் மஸ்ஜிதினுள் சிலையை வைத்தேன்” என்று பகிரங்கமாகக் கூறியபொழுது அவன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு அதிகாரிகள், 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த புனிதமான இறை வணக்கங்களை அங்கே நிறுத்தினார்கள்.
1984-ம் ஆண்டு அக்டோபரில் ராமஜென்ம பூமியை விடுவிக்கப் போவதாகக் கூறி ஹிந்துத்துவ வி.ஹெச்.பி.யின் பயங்கரவாதிகள் ஊர்வலம் நடத்தினர். அப்போது “ராமர் கோயிலைக் கட்ட வேண்டும்” என்று அராஜகமாக அறிவிக்கப்பட்டது. எல்.கே. அத்வானியின் தலைமையில் ‘ராமர் கோயில் இயக்கம்’ ஒன்றும் துவங்கப்பட்டது.
1986ம் ஆண்டு பிப்ரவரியில் ஃபைஸாபாத் நீதிமன்றம் பாபரி மஸ்ஜிதை ஹிந்துக்களுக்கு மட்டும் திறந்து விடுமாறு உத்தரவிட்டது. ஆட்சேபணை செய்த முஸ்லிம்கள் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்கள்.
1987-ம் ஆண்டு ஜனவரி முதல் “இராமாயணம்” என்ற தொலைக்காட்சித் தொடர் இந்தியா முழுவதும் தூர்தர்ஷன் மூலம் ஒளிபரப்பப்பட்டது. இது மக்களிடையே ராமர் மீது அதிகப்படியான பக்தியை உண்டாக்க உதவியது. இது ராமர் இயக்கத்திற்கு மேலும் வலுவைத் தந்தது.
1989ம் ஆண்டு செப்டம்பரில் ஹிந்துத்துவ பயங்கரவாத வி.ஹெச்.பி.யினர் நாடு முழுவதும் “ராம் சிலா” பூஜையை நடத்தி, ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று மக்கள் ஆதரவை – முக்கியமாக இந்துக்கள் ஆதரவைத் தேடினர்.
1990 நவம்பரில் எல்.கே.அத்வானி தனது ர(த்)த யாத்திரையைத் துவங்கினார். சோம்நாத்திலிருந்து அயோத்தியை நோக்கிச் சென்று வழிநெடுகிலும் இந்துக்களின் ஆதரவைப் பெறத் திட்டமிட்ட அத்வானியின் ரத யாத்திரை சென்ற இடமெல்லாம் முஸ்லிம்களின் ரத்தம் ஓட்டப்பட்டது.
இந்த நம்பிக்கைத் துரோகத்தின் உச்சகட்டம்தான் கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றம் பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் பல வருடங்களுக்குப் பிறகு அளித்த தீர்ப்பு. அந்த நிலத்தை மூன்று கூறுகளாகப் பிரித்து ஒரு பங்கை மட்டும் முஸ்லிம்களுக்குக் கொடுக்கவேண்டும் என்ற அந்தத் தீர்ப்பு நீதி செத்துவிட்டதையே பறைசாற்றியது. முஸ்லிம்கள் அந்தத் தீர்ப்புக்கெதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்கள்.
இப்படி ஹிந்துத்துவ ஃபாசிச பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.ஸும், அதன் துணை அமைப்புகளும் பாபரி மஸ்ஜிதைத் தகர்ப்பதில் கவனமாகத் திட்டமிட்டு, மிகவும் கச்சிதமாக நடந்து கொண்டன.மேலும் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தையும், அதனைச் சுற்றியுள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து அங்கே ஓர் இராமர் கோயிலைக் கட்டவேண்டும் என்ற திட்டத்தினை செயல்படுத்துவதில் அவைகடும் முயற்சியில் இறங்கின. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக “இராமர் கோயிலைக் கட்டுவதற்காக பாபரி மஸ்ஜிதை விட்டுக் கொடுத்துவிடலாம்” என்றொரு மனநிலையை அவை பொதுமக்களிடம் உருவாக்கி, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன.
இந்த மனநிலை மாற்றம் முஸ்லிம்களில் சிலருக்கு வந்திருப்பதுதான் வேதனையிலும் வேதனை. அவர்கள் பாபரி மஸ்ஜித் பிரச்னையை வெறும் கட்டடத் தகர்ப்புப் பிரச்னையாகப் பார்க்கின்றார்கள். அது முஸ்லிம்களின் வழிபாட்டுச் சின்னம் என்று அவர்கள் பார்க்கவில்லை. அது முஸ்லிம்களின் அடையாளம் என்று அவர்கள் பார்க்கவில்லை. அது முஸ்லிம்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்று அவர்கள் பார்க்கவில்லை. இந்த மஸ்ஜிதோடு இது நிற்கப்போவதில்லை, 3000 மஸ்ஜிதைக் காவு கொண்டாலும் இது நிற்கப் போவதில்லை என்று அவர்கள் பார்க்கவில்லை. இந்தப் பிரச்னைக்குப் பின்னணியிலுள்ள நீண்டகால சதித்திட்டத்தின் ஒரு கருவிதான் பாபரி மஸ்ஜித் என்று அவர்கள் பார்க்கவில்லை.
1949ம் ஆண்டு நடந்த நிகழ்வுகளில் மஸ்ஜித் மட்டும் அல்ல பிரச்னை. அயோத்தியாவில்ஒரு முஸ்லிம்கூட வசிக்கக் கூடாது, முஸ்லிம்களின் உடல்கள் அங்கே அடக்கம் செய்யப்படக் கூடாது, முஸ்லிம்களின் கடைகள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று பல விஷயங்களை ஆர்.எஸ்.எஸ். அங்கே அமுல்படுத்த முயன்றது. இதற்கு ஆளும் வர்க்கத்தில் இருந்த வல்லபாய் படேல், கே.கே.கே. நாயர் போன்றவர்களும் முழு உடந்தையாக இருந்தனர்.
ஹிந்துத்துவ சங்கப் பரிவாரங்களுக்கு பாபரி மஸ்ஜித் மட்டும் பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த முஸ்லிம்கள்தான் அவர்களுக்குப் பிரச்னை.அயோத்தியாவை ஒர் இந்து ராஷ்டிரத்தின் சோதனைக் களமாகமாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களது குறிக்கோள். முஸ்லிம்களின் மனதிலிருந்து பாபரி மஸ்ஜிதை எடுத்துவிட்டால் ஆர்.எஸ்.எஸ். தனது இந்து ராஷ்டிரத்தின் சோதனையில் வெற்றி பெற்றுவிட்டதாக நம்புகின்றது. அதற்கு அரசும், ஊடகங்களும் துணை போகின்றன.
நாம் கேட்பது கோயில் நிலத்தை அல்ல. மாறாக 483 ஆண்டு காலமாக நமது சொத்தாக இருந்து வந்திருக்கும் நம் நிலத்தைத்தான் கேட்கின்றோம். “அதே இடத்தில் மீண்டும் பாபரி மஸ்ஜித் கட்டித் தரப்படும்” என்று முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத்தான் கேட்கின்றோம். அதனைச் சுற்றி வாழ்ந்த முஸ்லிம்கள் மீண்டும் அங்கே நிம்மதியாக வாழத்தான் கேட்கின்றோம். நாம் இல்லையென்றால் நம் சந்ததிகள் அங்கே தொழ வேண்டும்.
இதற்காக மக்களை ஒன்று திரட்டுவோம். நம் தரப்பு நியாயத்தை மக்கள் மன்றம் முன் எடுத்துவைப்போம். நீதிக்காகக் குரல் கொடுப்பவர்களை, நியாயத்திற்காக போராடுபவர்களை ஓரணியில் ஒருங்கிணைப்போம். இதனைப் பெருந்திரள் மக்கள் போராட்டமாக மாற்றுவோம். இன்ஷா அல்லாஹ் பாபரி மஸ்ஜிதை மீட்டெடுப்போம்.
0 கருத்துரைகள்:
Post a Comment