சென்னை:பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாபரி மஸ்ஜித் வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். என எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தியில்; “டிசம்பர் 6,1992 இதே, நாளில் இந்திய அரசியல் சாசன சிற்பி டாக்டர்.அம்பேத்கர் நினைவு நாளில் அயோத்தியில் “பாபரி மஸ்ஜித்” பாஸிச சங்பரிவாரக் கும்பலால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. கோடிக்கணக்ககான மக்களின் இதயங்கள் சுக்கு நூறாக இடிந்து போனது.
இதன் மூலம் இந்திய மதச்சார்பின்மையும், ஜனநாயகமும், சகிப்புத் தன்மையும் கேள்விக்குறியானது. இரு சமூகங்களுக்கிடையே பெரும்பிளவையும், அமைதியின்மையும் ஏற்படுத்த நடந்த முயற்சிக்கு இது வலு சேர்த்தது.
பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு பின் மத்திய அரசு முஸ்லிம்களுக்கு வழங்கிய வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது.
பத்தொன்பது வருடங்களாக பாபரி மஸ்ஜிதை இடித்தவர்கள் சுதந்திரமாக சுற்றிவருகிறார்கள். 20 கோடி முஸ்லிம்களும் மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட கோடிக்கணக்கான ஹிந்துக்களும் பிற சமூகத்தார்களும் இந்திய நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்து நீதியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் நம்பிக்கை தகர்ந்து போகும் முன் நீதியை நிலை நாட்டும் வகையில் லிபரான் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பாபரி மஸ்ஜித் சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். மத்திய அரசும், நீதித்துறையும் இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment